Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, October 11, 2022

இரவு தாமதமான தூக்கம்... ரத்தக்குழாய்களின் அமைப்பை மாற்றலாம்... எச்சரிக்கும் மருத்துவர்!

அவள் விகடன் மற்றும் சேலத்திலுள்ள மணிப்பால் மருத்துவமனை இணைந்து இளம் வயதில் ஏற்படும் மாரடைப்பு குறித்த வழிகாட்டல் நிகழ்ச்சியை அண்மையில் நடத்தியது.

நிகழ்ச்சியில் மருத்துவமனையின் இன்டர்வென்ஷனல் கார்டியாலஜிஸ்ட் சையது அப்துல் காதர் பேசியது: பொதுவாக மாரடைப்பு நிகழும் சராசரி வயதைக் காட்டிலும் 10 ஆண்டுகள் முன்பாகவே இந்தப் பிரச்னை பாதிக்கத் தொடங்கிவிடுகிறது.
மாரடைப்பு

குறிப்பாக, இளைஞர்களுக்கு வரும் மாரடைப்பில் முன்பாகவே அறிகுறிகள், எச்சரிக்கை சிக்னல்கள் எதுவும் வராமல் திடீரென்று ஏற்பட்டுவிடுகிறது. மாரடைப்பினால் இளைஞர்கள் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாரடைப்பு ஏற்பட்டு நான்கு பேர் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களில் இரண்டு பேர் 50 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ளனர். அவர்களில் ஒருவர் 40 வயதுக்கும் கீழாகக்கூட இருக்க வாய்ப்புள்ளது.

மாரடைப்புக்கு அறிவியல்பூர்வமான முக்கிய காரணம் என்னவென்றால் சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம், அதிக கொலஸ்ட்ரால், புகைபிடித்தல், அதிகமாக குடும்பத்தில் யாருக்கேனும் இதயநோய் ஆகிய இவையெல்லாம் ஒருவருக்கு இதயநோய் வருவதற்கான முக்கிய காரணிகளாக இருந்தன. புகைபிடித்தல் மட்டுமல்லாமல் போதைப்பொருள் பயன்பாட்டினாலும் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்துள்ளது.
மது

மேலும் அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், போதிய உடல் உழைப்பு இல்லாததால் உடல் எடை அதிகரித்தல் ஆகிய காரணங்களுக்கும் இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு ஏற்படுவதற்கான காரணிகளாக உள்ளன. இதுதவிர, மரபணு காரணங்களாலும் மாரடைப்பு வரலாம்.

கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு இளயவதினர் மாரடைப்புக்கு ஆளாகும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் வொர்க் ஃப்ரம் ஹோம் கலாசாரத்தால் உடல் உழைப்பு குறைந்து, சரியான நேரத்துக்கு சாப்பிடாமல், இரவு நீண்ட நேரம் கண் விழித்து வேலை பார்ப்பது போன்ற செயல்பாடுகள் அதிரித்துள்ளன. இரவு நீண்ட நேரம் விழித்திருந்து வேலை பார்ப்பதால் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் அதிகரித்து, ரத்தநாளங்களின் இயல்பான அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது

மேலும் ரத்தநாளங்களில் கொழுப்பு (கொலஸ்ட்ரால்) படியும் தன்மையும் வேகமாக இருக்கும். நெஞ்சுப்பகுதியில் மட்டுமல்ல கீழ்த்தாடையிலிருந்து தொப்புள் பகுதி வரை எந்த இடத்தில் வலி வந்தாலும் அது மாரடைப்பாக இருக்க வாய்ப்புள்ளது.

நாள்தோறும் உடற்பயிற்சி, மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை, ஆரோக்கியமான உணவு, நேரத்தோடு சாப்பிட்டு, சரியான நேரத்தில் இரவுத்தூக்கம், குடும்பத்தினர், நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பது என நம்மை நாமே சந்தோஷமாக வைத்துக் கொண்டால் இதயமும் மகிழ்ச்சியாக இருக்கும்" என்றார்.

இதய அறுவை சிகிச்சை மருத்துவர் மருத்துவர் வினோத் சுப்ரமணியன் பேசியதாவது: ஒரு நோயாளி மாரடைப்பு அல்லது நெஞ்சுவலி என்ற அறிகுறியுடன் வந்தால், இதய மருத்துவர் அவருக்கு என்ன பிரச்னை ஏற்பட்டுள்ளது என்பதைக் கண்டறிவார்.
Surgery

அப்படிக் கண்டறியும்போது எந்தெந்த ரத்தநாளங்களில் எத்தனை சதவிகிதம் அடைப்பு உள்ளது, எந்த நிலையில் உள்ளது, தீவிரம் எவ்வாறு உள்ளது என்பதை ஆஞ்சியோகிராம் பரிசோதனையின் மூலம் கண்டறிவார்கள். ஆஞ்சியோகிராம் மற்றும் ஈசிஜி பரிசோதனைகளின் அடிப்படையில் வேறு வால்வுகளில் ஏதேனும் கசிவு இருக்கிறதா என்றும் கண்டறிவார்கள். மேலும் எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சையைத் திட்டமிட வேண்டும் என்பதையும் தீர்மானிப்பார்கள்.

பொதுவாக, திட்டமிடப்பட்ட பைபாஸ் அறுவை சிகிச்சை, அவசர பைபாஸ் அறுவைசிகிச்சை என இரண்டு வகையாகப் பிரிப்பார்கள். திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைக்கு இதய மருத்துவர் நோயாளியைப் பரிசோதித்துவிட்டு இதய அறுவை சிகிச்சை மருத்துவருக்குப் பரிந்துரைப்பார். அறுவை சிகிச்சை மருத்துவர் பைபாஸ் அறுவை சிகிச்சையை செய்தால் அந்த நோயாளிக்கு வேறு ஏதேனும் பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதா என்று ஆராய்ந்து அதன் அடிப்படையில் அறுவை சிகிச்சைக்கான தேதி நிர்ணயிக்கப்படும்.

மாரடைப்பு ஏற்பட்டு அவசர அறுவை சிகிச்சையைத் திட்டமிடும்போது நோயாளியின் இதய தசைகள் மிகவும் பலவீனமடைந்து காணப்படும். அவசர நிலையில் அவர்களை உயிர்வாழச் செய்வதற்காக ஓர் அறுவை சிகிச்சையைத் திட்டமிட வேண்டும். நோயாளி, நோயாளியின் குடும்பம், இதய மருத்துவர் மற்றும் இதய அறுவை சிகிச்சை மருத்துவர் என இந்த நான்கு பேரும் சேர்ந்து கூட்டாக முயலும்போதுதான் நோயாளியின் சிகிச்சை வெற்றிகரமாக அமையும்" என்றார்.

No comments:

Post a Comment