Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, October 3, 2022

``கிடைக்காத ஓய்வூதிய பணம்" கோயில்களில் பிச்சை எடுக்கும் ஓய்வு பெற்ற வேளாண் அரசு அதிகாரி..!

வேளாண்மை துறையில் அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒருவருக்கு ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை.

அதனால் மதுரை கோயில்களில் பிச்சை எடுத்து வாழும் அளவிற்கு அவரது வாழ்க்கை தலைகீழாக மாறியது. இதை அறிந்த பலரும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் ஆறு வாரத்திற்குள் அந்த முதியவருக்கான பணப்பலன்களை கொடுக்க வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு அதிகாரியாக பணியாற்றிய கோபால்

பட்டுக்கோடை அருகே உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் விரிவாக்க அலுவலராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் கோபால் வயது 74. இவருக்கு மூன்று மகன்கள்,இரண்டு மகள்கள் என ஐந்து பிள்ளைகள் இருந்தனர். இதில் ஒரு மகன் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி.கோபால் ஓய்வு பெற்ற பிறகு அவருக்கான ஓய்வூதிய பலன்கள் சில சிக்கல்களால் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியாக வாழ்வதற்காக கொடுக்கப்படும் ஓய்வூதிய பணம் கிடைக்காததால் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகியிருக்கிறது கோபாலின் குடும்பம்.

பணத்தை பெறுவதற்கான முயற்ச்சியில் தொடர்ந்து போராடி வந்த கோபாலுக்கு ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. இதனால் கோபாலின் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கி கொண்டது. அரசு வேலையில் நல்ல பொறுப்பில் இருந்தும் பிள்ளைகளுக்கு கால காலத்துக்குள் செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் போனதில் மனம் வெறுத்து காணப்பட்டுள்ளார்.


திருச்சிற்றம்பலம்


இந்த நிலையில் வீட்டிலிருந்து சென்றவர் மதுரை பகுதியில் உள்ள கோயில்களில் யாசகம் பெற்று வாழ்ந்து வந்துள்ளார். அரசு அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஒருவர் ஓய்வூதிய பணம் கிடைக்காததால் பிச்சை எடுத்து வருகிறார் என்பதை அறிந்த ஒருவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர கோபாலுக்கு உதவியிருக்கிறார். வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் ஓய்வூதிய பணப்பலன்கள் கிடைக்கவில்லை அதனால் ஏற்பட்ட வறுமையில் பிச்சை எடுத்து வாழ்ந்து வரும் கோபாலின் நிலை துயரமானது.

எனவே, ஆறு வாரத்திற்குள் கோபாலுக்கான ஓய்வூதிய பணத்தை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். வேளாண்மை துறையில் அரசு அதிகாரியாக ஓய்வு பெற்ற கோபால் வறுமையின் காரணமாக பிச்சை எடுத்து வாழ்கிறார் என்ற செய்தி பலரையும் வேதனைக்குள்ளாக்கியது. இது குறித்து திருச்சிற்றம்பலம் பகுதியில் சிலரிடம் பேசினோம், "கோபால் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்.வேளாண் விரிவாக்க பணியாளராக திருச்சிற்றம்பலத்தில் பணி புரிவதற்காக வந்தவர் குடும்பத்துடன் இங்கேயே தங்கினார்.

வேளாண்மை துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற கோபால்

வேளாண்மைக்காக அரசு அறிவிக்கும் திட்டங்கள் அனைத்தையும் விவசாயிகளிடையே அக்கறையாக கொண்டு சேர்ப்பார். கிட்டதட்ட 30 வருடங்களாக இப்பகுதியில் வசிப்பதுடன் விவசாயிகளையே சொந்த,பந்தங்களாக்கி வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் 2006 -ல் பணியிலிருந்து ஓய்வு பெற்ற அவருக்கு ஓய்வூதிய பணப் பலன்கள் கிடைக்கவில்லை. வேளாண் கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் நிலுவையில் இருக்கும் காரணத்தால் ஓய்வூதிய பலன்கள் அவருக்கு கிடைக்கவில்லை என சொல்லப்பட்டது.

பணத்தை பெறுவதற்கு பல வகையில் முயற்ச்சி செய்தும் பலன் இல்லாமல் போனது. வறுமையால் படிப்பை தொடர முடியாமல் போன மகன் தற்கொலை செய்து கொண்டார். இதில் மனம் உடைந்து போன கோபால் அரசு வேலை பார்த்தும் என் பிள்ளைகளை காக்க முடியாத நிலைக்கு ஆளாகிட்டேனே என புலம்பி கொண்டே இருப்பார். பின்னர் வீட்டிலிருந்து மதுரை சென்றவர் வயிற்று பசிக்காக அங்குள்ள கோயில்களில் பிச்சை எடுத்து வருவதாக கேள்விப்பட்டதும் அவருடைய குடும்பத்தார் மட்டுமின்றி பலரும் கலங்கி விட்டனர்.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவ்வப்போது வீட்டுக்கு வருவார். ஒரு மாதத்திற்கு முன் அவருடைய மூத்த மகளுக்கு திருமணம் நடைப்பெற்றது. அதில் விருந்தினர் போல் வந்து தலைக்காட்டியவர் என் பொண்ணு கல்யாணத்துக்கு என்னால எந்த உதவியும் செய்ய முடியாம போயிடிச்சேனு கலங்கினார். அப்ப, ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதற்காக வழக்கு தொடர்ந்திருக்கிறேன் பணம் கிடைச்ச பிறகு எல்லாமே மாறிடும் என நம்பிக்கையாக கூறிவிட்டு சென்றார்.

தற்போது, ஆறு வாரத்திற்குள் பணத்தை கொடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மகிழ்ச்சியை தருகிறது. கோபாலுக்கு மட்டுமல்ல அவரை நம்பியிருந்த குடும்பத்திற்கும் வாழ்க்கை தலைகீழாக மாறியது துயரம். அதற்கான தீர்வு தற்போது கிடைத்து விட்டதாகவே நீதிமன்ற தீர்ப்பு உணர வைக்கிறது. இனியாவது அவர் குடும்பத்துடன் நல்ல நிலையில வாழ வேண்டும் என்பதே விவசாயிகளான எங்களுடைய எதிர்பார்ப்பாக உள்ளது" என்றனர்.

No comments:

Post a Comment