JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
மழைக்காலத்தில் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சினைகளால் நாம் பாதிப்பு அடைய வாய்ப்பு உண்டு. குறிப்பாக நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும்பட்சத்தில் இந்த நோய்கள் நம்மை எளிதில் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.ஆகவே, மழைக்கால நோய்களை விரட்டியடிக்கும் வகையில் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நாம் பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உடனே ஏதோ மருந்து, மாத்திரை உட்கொள்ள வேண்டும் என்று நினைத்து விட வேண்டாம். சாதாரணமாக நம் வீட்டின் சமையல் அறையில் உள்ள பொருட்களிலேயே மருத்துவ குணம் நிறைய உள்ளது.இஞ்சி, மஞ்சள், இலவங்கம் ஆகியவற்றில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கான ஆண்டி ஆக்ஸிடண்ட் சத்துக்கள் நிறைய உள்ளன. நம் உடலில் நன்மை செய்யும் பாக்டீரியா வளருவதற்கு இவை உதவிகரமாக இருக்கின்றன. அந்த பாக்டீரியா வளரும்போது தீய பாக்டீரியாக்களை எதிர்த்து போராட தொடங்கி விடும்.

என்னென்ன பலன் கிடைக்கும்?
இஞ்சி, மஞ்சள், இலவங்கம் அடங்கிய மூலிகை தேநீர் அருந்தினால் கவலை, மன அழுத்தம் போன்றவை குறையும். இதய நோய்களை கட்டுப்பாட்டிற்குள் வைக்கும். நீரிழிவு நோயாளிகள் இந்த தேநீரை அருந்தி வந்தால் சர்க்கரை அளவு சீராக இருக்கும். நம் உடலில் ஏற்படக் கூடிய அனைத்து வகை அழற்சிகளை இது சரி செய்யக் கூடியது.

மூலிகை தேநீர் தயாரிக்க தேவையான பொருட்கள்
தண்ணீர் - அரை கப்
இடித்த இஞ்சி மற்றும் சுக்கு தூள் - அரை டீஸ்பூன் அளவு
மிளகுத்தூள் - ஒரு சிட்டிகை
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
நெய் - கால் டீஸ்பூன்
சர்க்கரை - உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்.

செய்முறை
அனைத்து மூலப் பொருட்களையும் தண்ணீரில் கலந்து, மிதமான தீயில் சுமார் 10 நிமிடங்களுக்கு கொதிக்க வைக்கவும். பிறகு இதனை வடிகட்டி இளம் சூட்டில் பருகலாம். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, பருவகால நோய்களை எதிர்கொள்ள இது உதவியாக இருக்கும். உடலுக்கு நன்மை தரக் கூடியதுதான் என்றாலும் தினசரி எடுத்துக் கொள்ள வேண்டாம். வாரம் இருமுறை எடுத்துக் கொள்ளலாம்
No comments:
Post a Comment