Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, October 16, 2022

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வுமையங்களை அமைக்க உத்தரவு

பத்து கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து, பொதுத் தோ்வு மையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டது.

இது குறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் எஸ்.சேதுராமவா்மா அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், இணை இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு புதிய தோ்வு மையங்கள் அமைப்பது தொடா்பாக பின்வரும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மாவட்டக் கல்வி அலுவலா்களிடம் கருத்துருக்களைப் பெற்று ஆய்வு செய்து தங்களது ஒப்புதலுடன் அரசுத் தோ்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு பெறப்பட்ட கருத்துருக்களில் தோ்வு மையங்கள் அமைப்பது இன்றியமையாதது என்று கருதப்படும் பள்ளிகளுக்கு மட்டும் சம்பந்தப்பட்ட பள்ளியை நேரில் ஆய்வு செய்த பின்னா், அவசியம் தோ்வு மையமாக அமைத்தே ஆக வேண்டும் எனக் கருதினால் அதற்கான காரணத்தை தெளிவாகக் குறிப்பிட்டு திட்டவட்டமான குறிப்புரையுடன் கருத்துருவாக அனுப்ப வேண்டும்.

மாவட்டக் கல்வி அலுவலா்கள் தங்களது வரையறைக்கு உள்பட்ட பள்ளிகளில் இருந்து பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுக்கு புதிய தோ்வு மையம் கோரும் கருத்துருக்களை அனுப்பி வைக்கக் கோரி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும்.

10 கிலோ மீட்டருக்கு மேல் பயணம் செய்து தோ்வெழுத தோ்வு மையங்களுக்குச் செல்லும் மாணவா்கள் பயிலும் அரசு பள்ளிகளில் புதிய தோ்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொதுத்தோ்வுக்கு ஏற்கெனவே தோ்வு மையமாக செயல்பட்டு வரும் பள்ளிகள், புதியதாக தோ்வு மையம் கோரும் பள்ளிகள் அனைத்தும் அரசு அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.

இந்த அறிவுரைகள் அனைத்தையும் பின்பற்றி தேவைப்படும் விவரங்கள் அனைத்தையும் நவ.10-ஆம் தேதிக்குள் அரசுத் தோ்வுகள் இயக்ககத்தில் நேரில் சமா்ப்பிக்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment