Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, November 30, 2022

ஆசிரியர் கல்வியியல் பல்கலை: 1.67 லட்சம் பேருக்கு பட்டம்


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை பட்டமளிப்பு விழாவில், 1.67 லட்சம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலையின், 10வது பட்டமளிப்பு விழா, சென்னையில் நேற்று நடந்தது. கவர்னர் ரவி தலைமையில் நடந்த விழாவில், மணிப்பூரில் உள்ள ஐ.ஐ.ஐ.டி., இயக்குனர் கிருஷ்ணன் பாஸ்கர், முதன்மை விருந்தினராக பங்கேற்றார்.

'ஸ்மார்ட்' கல்வி

உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிறப்புரை ஆற்றினார். பல்கலை துணைவேந்தர் பஞ்சநாதம், பல்கலையின் ஆண்டு செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.

இந்நிகழ்வில், 2018 - -19ம் ஆண்டு முதல், மூன்று கல்வி ஆண்டுகளாக, பி.எட்., - எம்.எட்., - எம்.பில்., - பிஎச்.டி., முடித்த, 1.67 லட்சம் பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பல்கலை தேர்வுகளில் தர வரிசையில் முன்னிலை பெற்ற, 47 மாணவர்கள் உள்பட, 406 பேர் நேரடியாக பட்டங்கள் பெற்று கொண்டனர். மற்றவர்களுக்கு, அந்தந்த கல்லுாரிகள் வழியாக சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

கவர்னர் ரவி பேசியதாவது:

ஆசிரியர் பணிக்கான பட்டம் பெற்றவர்களுக்கு, அதிக பொறுப்புகள் உள்ளன. இந்த காலகட்டத்தில் 'ஸ்மார்ட்' கல்வியை நீங்கள் வழங்க வேண்டும். பொது அறிவை ஊட்ட வேண்டும்.

மிகவும் தொன்மை வாய்ந்த தமிழ் மொழியின் பெருமையை, பாரம்பரியத்தை, கலாசாரத்தை கற்று தர வேண்டும். இந்தியா ஒருங்கிணைந்த நாடாக இருந்தது. காலனி ஆதிக்கத்தால், பிரிட்டிஷாரால் பல வகையில் பிரிக்கப்பட்டன என்ற, வரலாற்றை விளக்க வேண்டும்.

தமிழக மாடல் திட்டம்

இந்த நாடு ஒரே குடும்பம் போன்றது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில், அனைவரும் சகோதரர்கள். காசி முதல் கன்னியாகுமரி வரை, தமிழ் மொழியின் பெருமை இருந்தது. அதனால்தான் 'காசி தமிழ்ச் சங்கமம்' நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

வட மாநில அரசுகள், தமிழை தங்களின் பாடத்திட்டத்தில் இணைத்து, தமிழையும், திருக்குறளையும் போதிக்க உள்ளன. 13 மொழிகளில் திருக்குறள் மொழி மாற்றம் செய்யப்பட்டு, புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளது. இதை எல்லாம் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுத் தர வேண்டும்.

அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

அனைத்து மாநிலங்களும், தமிழக மாடல் திட்டங்களைத் தான் பின்பற்றுகின்றன. ஆசிரியர் கல்விக்காக, ஆசியாவிலேயே முதலில் துவங்கப்பட்ட நிறுவனம், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலை.

இங்கு பட்டம் பெற்றவர்கள், ஆசிரியர் பணிக்கு செல்லும்போது, மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பத்தையும், பொது அறிவையும் இணைத்து கற்றுத் தர வேண்டும்.

உயர் கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், பல்கலை பதிவாளர் சவுந்தரராஜன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கணேசன் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment