இட்லியைத் துரத்திய பாட்டி
ஒரு ஊரில் ஒரு பாட்டி இருந்தார். அந்தப் பாட்டிக்கு இட்லி என்றால் ரொம்பப் பிடிக்கும். இட்லி சமைப்பதும் அவளுக்குப் பிடிக்கும். பாட்டி தினமும் மாவை அரைத்துச் சுடச்சுட இட்லி செய்து எல்லோருக்கும் தருவார். அவர்கள் ருசித்துச் சாப்பிட்டுப் பாராட்டுவார்கள், இட்லிக்கு தருகிற காசு கூட இரண்டாம்பட்சம்தான். அவர்கள் பாராட்டுவது பாட்டிக்கு மிகவும் பிடிக்கும்.
ஒருநாள், பாட்டி இட்லிகளைத் தட்டில் வைக்கும்போது ஒரு இட்லி மட்டும் கீழே விழுந்து உருண்டு ஓட ஆரம்பித்தது. ஏய், நில்லு, நில்லு என்று கத்திக்கொண்டு இட்லியைத் துரத்தினார் பாட்டி. அப்போது, திடீரென பூமி பிளந்தது, இட்லியோடு பாட்டியும் அதற்குள் விழுந்துவிட்டார். பூமிக்குக் கீழே, இட்லி தொடர்ந்து ஓடியது, பாட்டியும் துரத்தினார்.
அங்கு, சில சாமி சிலைகள் நின்றிருந்தன. பாட்டி முதல் சிலையிடம் கேட்டார், இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா? ஆமா, பார்த்தேன் என்றார் முதல் கடவுள், ஆனா, நீ அதைத் துரத்திகிட்டுப் போகாதே. அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா.
நான் அரக்கியைப் பார்த்து பயப்படமாட்டேன் என்று சொல்லிவிட்டுத் தொடர்ந்து நடந்தார் பாட்டி. மீண்டும், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் பாட்டி, இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா?
ஆமா, பார்த்தேன் என்றார் இரண்டாவது கடவுள். ஆனா, நீ அங்கு போகாதே, அந்தப் பக்கம் ஒரு அரக்கி இருக்கா, அவ உன்னைத் தின்னுடுவா. சொல்வதை கேட்காமல் தொடர்ந்து நடந்தார் பாட்டி.
சற்றுத் தொலைவில், அடுத்த சாமி சிலை வந்தது. அதனிடம் இந்தப்பக்கமா ஒரு இட்லி வந்துச்சா? நீங்க பார்த்தீங்களா? என்றார் பாட்டி. ஆமா, பார்த்தேன் என்றார் மூன்றாவது கடவுள். நீ சீக்கிரமா எனக்குப் பின்னாடி ஒளிஞ்சுக்கோ. ஏன்? இதோ, அரக்கி வர்றா. இதைக் கேட்ட பாட்டி அந்தச் சாமிக்குப் பின்னால் ஒளிந்துகொண்டார்.
சில நிமிடங்களில், அந்த அரக்கி வந்தாள். அவள் பெரிய, பயமுறுத்தும் உருவத்தில் இருந்தாள். சாமி முன் வந்து கும்பிட்டாள். பிறகு, மூக்கை உறிஞ்சி, மனுஷ வாசனை அடிக்குதே என்றாள்.
அதெல்லாம் இல்லை நீ கிளம்பு! என்றார் கடவுள். கண்டிப்பா மனுஷ வாசனை அடிக்குது என்றபடி, பாட்டியைப் பார்த்துவிட்டாள். பாட்டியிடம், உன் இட்லியைப்பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கேன் என்றாள் அரக்கி. என்னோட சமையல்காரியாக வைத்துக்கொள்ள போகிறேன் வா! என்று அரக்கி பாட்டியை ஒரு படகில் ஏற்றினாள். ஆற்றில் படகு சென்றது.
இந்தச் சின்ன ஆற்றைக் கடப்பதற்குப் படகு எதுக்கு? நீதான் அரக்கியாச்சே, என்னைத் தூக்கிட்டுத் தண்ணியில நடக்கமாட்டியா? அச்சச்சோ, எனக்குத் தண்ணின்னா பயம், நீச்சலடிக்கவும் தெரியாது என்றாள் அரக்கி.
சிறிது நேரத்தில் அவர்கள் அரக்கி மாளிகைக்குள் நுழைந்தார்கள். அங்கே இவளைப்போலவே இன்னும் பல அரக்கிகள் இருந்தார்கள். இனிமே எங்களுக்கு நீதான் தினமும் சமைக்கணும் என்றாள் அரக்கி. சமைக்கறேன், ஆனா இவ்ளோ பேருக்குச் சமைக்க அரிசி வேண்டும் என்றார்.
இதோ என்று ஒரே ஒரு அரிசியை எடுத்துக் கொடுத்து இதைப் பாத்திரத்துல போட்டு இந்த மந்திரக் கரண்டியால ஒருமுறை கலக்கினாப் போதும், அது பாத்திரம் முழுக்க நிறைஞ்சுடும் என்றாள் அரக்கி.
பாட்டி ஆச்சரியத்துடன் சமையலறை சென்று ஒரு பாத்திரத்தில் அரிசியைப் போட்டுக் கலக்கினார். அந்தப் பாத்திரம் முழுக்க அரிசி நிறைந்திருந்தது. அதை வைத்து ருசியாகச் சமைத்தார். அதை அரக்கிகள் தின்று தீர்த்தார்கள்.
சிலநாள் கழித்து, பாட்டிக்கு வீடு திரும்பும் ஆசை வந்தது. அரக்கி இல்லாத நேரத்தில் படகில் ஏறிப் புறப்பட்டார் பாட்டி. ஞாபகமாக அந்த மந்திரக் கரண்டியைத் தன்னுடன் எடுத்துக்கொண்டார். அவர் ஆற்றை கடக்கும் நேரத்தில் அரக்கிகள் வந்துவிட்டனர். பாட்டி பயந்தார். ஆற்றின் இருபுறமும் அரக்கிகள். ஆனால் யாருக்கும் நீச்சல் தெரியாது. அரக்கிகள் சட்டென்று குனிந்து சில நிமிடங்களில் ஆற்று நீரை அவர்கள் முழுக்கக் குடித்துவிட்டார்கள். பாட்டியின் படகு சேற்றில் சிக்கிக்கொண்டது.
அரக்கிகள் கோபத்தோடு பாட்டியிடம் வந்தனர். பாட்டி ஓடத்தொடங்கினார். சேற்றில் பாட்டியின் கால் சிக்கி தடுமாறி விழுந்தார். இதைப் பார்த்த அரக்கிகளுக்குச் சிரிப்பு வந்தது. அவர்கள் குடித்த தண்ணீரெல்லாம் வெளியே வந்துவிட்டது. ஆறு மறுபடி ஓடத் தொடங்கியது.
சட்டென்று பாட்டி படகில் ஏறி தப்பித்து தன் வீட்டுக்குள் நுழைந்தார். பின்னர், அந்தப் பள்ளமும் மூடிக்கொண்டது. பாட்டியைப் பார்த்தவர்கள் இவ்ளோ நாளா எங்கே போனீங்க பாட்டி? உங்க இட்லி சாப்பிடாம ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம் என்றார்கள்.
இதோ, வந்துட்டேன் என்றார் பாட்டி. இனிமே உங்களுக்கு மட்டுமில்லை, இந்த ஊருக்கே நான் இட்லி செஞ்சு போடுவேன் என்றார். தன் இடுப்பிலிருந்த மந்திரக் கரண்டியைத் தொட்டு இட்லி சமைத்தார்.
அன்றுமுதல், பாட்டியின் வீட்டில் அரிசியும் மற்ற பொருள்களும் நிறைந்து வழிந்தன. தினமும் ஆயிரக்கணக்கானோர் அவர் தந்த இட்லியைச் சாப்பிட்டு மகிழ்ந்தார்கள்.
நீதி :
உதவும் எண்ணம் இருத்தல் வேண்டும்.
No comments:
Post a Comment