பொய்
மேட்டுக்குப்பம் என்ற ஊரில் சுதன் என்பவனும், அவன் மனைவியும் பிறரை ஏமாற்றுவதில் சிறந்தவர்கள். தினந்தோறும் பத்துப் பேருக்கு அன்னதானம் அளிக்கிறேன் என்று பொய் சொல்லி காசுகளை வாங்குவான் சுதன்.
ஆனால், அவன் யாருக்கும் ஒரு பிடி சோறு கூட போட மாட்டான். அன்னதானம் வாங்குவதற்கு யாராவது வந்தால், அவர்களிடம் ஐயா! இப்பத்தான் பத்துப் பேர் வயிறார சாப்பிட்டுச் சென்றனர். நாளை வாருங்கள் வயிறார சாப்பிடலாம், என்று இனிமையாகப் பேசி அனுப்பிவிடுவான்.
பக்கத்து ஊரில் மகேன் என்பவன் இருந்தான். இவன் யாரையும் ஏமாற்றி விடுவான். சுதனைப் பற்றி கேள்விப்பட்டான் மகேன். சுதன் வீட்டில் விருந்து சாப்பிட வேண்டும் என்று மகேன் சுதன் வீட்டிற்கு சென்றான். ஐயா! உங்கள் அன்னதானத்தைப் பற்றி கேள்விப்பட்டு பக்கத்து ஊரில் இருந்து வருகிறேன், என்றான்.
ஆமாம், உண்மைதான். தினந்தோறும் பத்து பேருக்கு தலை வாழை இலையில் பதினாறு வகைக் கறிகளுடன் விருந்து பரிமாறுகிறேன். சற்று முன்தான் அவர்கள் மகிழ்ச்சியாக சாப்பிட்டுச் சென்றனர். ஆனால், உங்களை ஏமாற்ற எனக்கு விருப்பம் இல்லை, நாளை வாருங்கள் என்று சொல்லி வீட்டுக்குள் சென்ற சுதனிடம், யார் வந்தது? என்று மனைவி கேட்டாள்.
நம்மிடம் ஏமாற வெளியூரில் இருந்து வந்திருக்கிறான். நாளை வா! என்று சொல்லி விட்டேன். அவன் எத்தனை நாள் வந்தாலும் இதே பதில்தான், என்று சொல்லிச் சிரித்தான் சுதன்.
மறுநாள் விடியற்காலை நான்கு மணிக்கே சுதன் வீட்டுக் கதவை தட்டினான் மகேன். தூக்கக்கலக்கத்துடன் எழுந்த சுதன், கதவை திறந்தான். ஐயா! இன்று உங்கள் வீட்டு விருந்திற்கு முதல் ஆளாக வந்துள்ளேன். விருந்து தயாரானதும் எழுப்புங்கள், என்று சொல்லி அந்த வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான் மகேன்.
உள்ளே வந்த சுதன், மனைவியிடம், நேற்று வந்த வெளியூர்காரன் இன்று விடிகாலையிலேயே வந்து நம் வீட்டுத் திண்ணையில் படுத்துக்கொண்டான். விருந்து சாப்பிடாமல் போக மாட்டான் போல இருக்கிறது, என்று கவலையுடன் சொன்னான்.
கவலை வேண்டாம், அவனிடம் என் மனைவிக்குக் காய்ச்சல். நாளை வா, என்று சொல்லி அனுப்பி வையுங்கள், என்றாள் அவள். மனைவி சொல்படி, பொழுது விடிந்ததும் மகேனிடம் சோகமான முகத்துடன் வந்த சுதன், என் மனைவிக்குக் காய்ச்சல் படுத்தப்படுக்கையாகக் கிடக்கிறாள். இந்த நிலையில் அவளால் சமைக்க முடியாது. நாளை வாருங்கள் கண்டிப்பாக விருந்து சாப்பிட்டுச் செல்லலாம், என்றான்.
மனைவிக்குக் காய்ச்சல் என்பதற்காக அன்னதானத்தை யாராவது நிறுத்துவார்களா? பதினாறு வகைக் கறிகளோடு, வடை, பாயசம் நான் செய்கிறேன், என்று சொல்லி சமையல் அறைக்குச் சென்று, சமைக்கத் தொடங்கினான். இதை எதிர்பாராத சுதனும், அவன் மனைவியும் திகைத்தனர்.
சிறிது நேரம் சென்றது. சுதனுக்கும், மனைவிக்கும் ஒரு யோசனை வந்தது அதன்படி, மகேன் சமையலை முடித்தான். அடுப்படியில் இருந்ததால் புகை படிந்து இருக்கிறீர். ஆற்றிற்குச் சென்று நீராடிவிட்டு வாரும். வரும் போது வாழை இலைகளை அரிந்து எடுத்து வாரும், என்றான் சுதன்.
அவனும் ஆற்றிற்கு சென்று நீராடிவிட்டு, வாழை இலைகளுடன் வந்தான். அவன் வருவதை இருவரும் பார்த்தனர். உரத்த குரலில் அவள், வந்தவர்களுக்கு எல்லாம் சாப்பாடு போட நாம் சத்திரமா நடத்துகிறோம். யாருக்கும் இங்கே சாப்பாடு கிடையாது என்று கோபத்துடன் கத்தினாள். நான் யாருக்குச் சாப்பாடு போடச் சொன்னாலும் நீ போட வேண்டும். எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன், என்று கத்தினான் சுதன்.
இப்படியே அவர்கள் இருவரும் சண்டை போட்டபடியே பார்த்தனர். இலைகளுடன் நின்றிருந்த மகேன் அங்கிருந்து அசைவதாகத் தெரியவில்லை. தொடர்ந்து சண்டை போட்டனர். சற்று நேரத்தில் அங்கே அவனைக் காணவில்லை. இவர்கள் சண்டையை நிறுத்திவிட்டு, அந்த ஏமாளி நன்றாக சமைத்து வைத்திருக்கிறான். எனக்குப் பசியாக உள்ளது நாம் சாப்பிடுவோம், என்றாள் சுதனின் மனைவி.
இருவரும் சாப்பிட அமர்ந்தனர். பரண் மேல் ஒளிந்து இருந்த மகேன், அவர்கள் முன் குதித்தான். தங்களது திறமை அவனிடம் செல்லாது என்பதை இருவரும் அறிந்து, அவனுக்கு விருந்து போட்டு அனுப்பி வைத்தனர்.
நீதி :
ஏமாற்றுபவர்கள் ஒருநாள் ஏமாறுவார்கள்.
No comments:
Post a Comment