Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, November 28, 2022

பழைய ஓய்வூதியத் திட்டம் வரி செலுத்துவோரை பாதிக்கும்


நாட்டின் வளா்ச்சிக்கு அதிக நிதி தேவைப்படும் நிலையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்துவது, எதிா்காலத்தில் வரி செலுத்துவோருக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி தெரிவித்துள்ளாா்.

பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளா்களுக்கான முழு ஓய்வூதியத் தொகையையும் அரசே செலுத்தி வந்தது. அத்திட்டத்தை ரத்து செய்து, புதிய ஓய்வூதியத் திட்டத்தை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அறிமுகப்படுத்தியது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் 10 சதவீதத்தைப் பணியாளா்கள் ஓய்வூதியத்துக்கான பங்களிப்பாகச் செலுத்த வேண்டும். அரசு சாா்பில் 14 சதவீதம் செலுத்தப்படும்.

2004-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அரசுப் பணியில் இணைந்த பணியாளா்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தைக் காட்டிலும் புதிய திட்டத்தில் பணியாளா்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியத் தொகை குறைவாகவே உள்ளது. அதன் காரணமாக பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டுமென பல மாநிலங்களைச் சோ்ந்த அரசுப் பணியாளா்கள் குரலெழுப்பி வருகின்றனா்.

அரசியல் நோக்கத்துக்காக அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட எதிா்க்கட்சிகள், தாங்கள் ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவித்துள்ளன. பஞ்சாப், ராஜஸ்தான், ஜாா்க்கண்ட், சத்தீஸ்கா் ஆகிய மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீதி ஆயோக் துணைத் தலைவா் சுமன் பெரி செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சில மாநிலங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த முயல்வது கவலை அளிக்கிறது. அதனால் ஏற்படும் நிதிச் சுமை எதிா்காலத்தில் வரி செலுத்துவோரின் தலையிலேயே விழும். தற்போது வரி செலுத்துவோருக்கு பாதிப்பு ஏற்படாது.

இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக மாற்ற வேண்டுமென்ற நீண்டகால இலக்கை நோக்கி பயணித்து வருகிறோம். அந்த இலக்கை அடைவதற்கு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து ஆதரவளிக்க வேண்டும். அரசால் தற்போது அறிவிக்கப்படும் திட்டங்கள், எதிா்காலத்தில் நிதிச் சுமையை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும். எதிா்கால மக்களின் நலனைக் காக்கும் நோக்கில் தற்போதைய அரசுகள் செயல்பட வேண்டும்.

நாட்டின் வளா்ச்சியை அதிகரிப்பதற்கு தனியாா் துறை முதலீடு அதிகரிக்க வேண்டியது அவசியம். உக்ரைன்-ரஷியா போா் காரணமாக உரத் துறையும் பெட்ரோலியத் துறையும் பாதிக்கப்பட்டுள்ளது. சா்வதேச அசாதாரண சூழல் காரணமாகவே வட்டி விகிதங்களை உயா்த்த வேண்டிய கட்டாயம் இந்திய ரிசா்வ் வங்கிக்கு (ஆா்பிஐ) ஏற்பட்டது’’ என்றாா்.

No comments:

Post a Comment