Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, December 24, 2022

10ஆம் வகுப்பு மதிப்பெண் இல்லை - ஜேஇஇ படிவத்தை நிரப்ப முடியாத தமிழ்நாடு 'கொரோனா பேட்ச் ஆல் பாஸ்' மாணவர்கள்

என்ஐடி, ஐஐடி போன்ற மத்திய அரசின் உயர் கல்வி நிஇறுவனங்களில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் போன்ற படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை (என்டிஏ) நடத்தும் கூட்டு நுழைவுத்தேர்வு எனப்படும் ஜேஇஇ தேர்வு விண்ணப்பத்தை நிரப்ப முடியாத நிலையில், கொரோனா காலத்தில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளனர்.

ஆரம்பத்தில் இந்த தேர்வு சிபிஎஸ்இ மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் என்டிஏ இத்தேர்வை நடத்தி வருகிறது.

ஆண்டுக்கு இரு முறை என ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும் இந்த தேர்வுக்காக ஒவ்வோர் ஆண்டும் பல லட்சம் மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

2023ஆம் ஆண்டுக்கான தேர்வு தேதி குறித்த அறிவிப்பும் விண்ணப்ப படிவமும் வெளியாகியுள்ளது. இதில், 10ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தான் 2020-21 ஆகிய கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட தமிழக மாணவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2021இல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வை மார்ச் மாதத்தில் நடத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. கொரோனா தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் ஜூன் 5ஆம் தேதிக்கு தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

கொரோனா பரவல் குறையாமல் இருந்ததால், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகளை ரத்து செய்து அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

11ஆம் வகுப்பில் விடுபட்ட தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாக அப்போது குறிப்பிட்ட பழனிசாமி, 10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்தார்.

யாருக்கெல்லாம் பாதிப்பு?

அவ்வாறு, 2021ஆம் ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்வில் ஆல் பாஸ் ஆன மாணவர்கள்தான் தற்போது ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

ஜேஇஇ தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பத்தில் பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்களை குறிப்பிட வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2021இல் ஆல் பாஸ் ஆன மாணவர்களுக்கு சான்றிதழ்களில் மதிப்பெண்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, ஜேஇஇ விண்ணப்பத்தில் மதிப்பெண்களை குறிப்பிட முடியாமல் தமிழக மாணவர்கள் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

"தேசிய தேர்வு முகமை போன்ற ஒரு அங்கீகாரம் பெற்ற அமைப்பு, தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பு அனைத்து மாநிலங்களையும் அந்த முகமை கலந்து ஆலோசிக்க வேண்டும்," என்று கூறுகிறார் கல்வியாளர் ஜெய்பிரகாஷ் காந்தி.

"தேர்வு முறைகளை மேற்கொள்ளவுள்ளோம், உங்களுக்கு அதில் ஏதேனும் சிரமம் உள்ளதா என அனைத்து மாநில கல்வித் துறைகளையும் தேசிய தேர்வு முகமை தொடர்புகொண்டு பேச வேண்டும்" என்று கூறும் அவர், தேசிய தேர்வு முகமை இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படாமல் தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கிறது என்று குற்றம்சாட்டுகிறார்.

"தேசிய தேர்வு முகமை என்பது ஒரு குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டுமானது அல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்குமானது," என்று கூறும் ஜெய்பிரகாஷ் காந்தி, "எந்த வித விண்ணப்ப பணிகளையோ சேர்க்கை பணிகளையே தொடங்குவதற்கு முன்பாக அனைத்து மாநிலங்களுடன் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி அவர்களின் கருத்துகளை என்.டி.ஏ கேட்கவேண்டும். அதில் கூறப்படும் திருத்தங்களை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்" என்று தெரிவித்தார்.இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் மனு அளிக்கும் மதுரை தொகுதி எம்.பி சு. வெங்கடேசன்

அமைச்சரிடம் முறையிட்ட எம்.பி

இந்த விவகாரம் தொடர்பாக இந்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார் மதுரை தொகுதி கம்யூனிஸ்ட் எம்பி சு. வெங்கடேசன்.

"பல லட்சம் மாணவர்களின் எதிர்காலத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று அவர் அமைச்சரை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஜேஇஇ தேர்வுக்கான விண்ணப்ப படிவத்தில் மாற்றம் செய்யவில்லை என்றால் தமிழக அரசின் பாட திட்டத்தில் பயின்ற அனைத்து மாணவர்களும் பாதிக்கப்படுவார்கள் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானிடம் நேரில் தெரிவித்தேன். உடனடியாக துறை செயலாளரை அழைத்து பேசிய அமைச்சர், இந்த விவகாரத்தில் விரைவில் தீர்வு காணும்படி உத்தரவிட்டார்" என்று கூறினார்.

No comments:

Post a Comment