Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 11, 2022

சம வேலைக்கு சம ஊதியம் அமைச்சரிடம் பேச்சுவார்த்தை நடத்திய இடைநிலை ஆசிரியர்கள்


சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற திமுக தோ்தல் வாக்குறுதியான தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இடைநிலை ஆசிரியா்கள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

கடந்த 2009-ஆம் ஆண்டுக்குப் பின்னா் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியா்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் பிற இடைநிலை ஆசிரியா்களுக்கு இணையாக ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த காலங்களில் பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.

இதற்கிடையே, இந்தக் கோரிக்கை நிறைவேற்றப்படும் என திமுக தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. மேலும், இந்தக் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற கோரி தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கும் ஆசிரியா்களின் குறைகளுக்கு தீா்வு காண்பதற்காக உருவாக்கப்பட்ட ‘ஆசிரியா் மனசு பெட்டி’ திட்டத்துக்கும் இடைநிலை ஆசிரியா்கள் கடந்த ஒரு வாரமாக மின்னஞ்சல்களை அனுப்பி வருகின்றனா். நீண்ட காலமாக தொடரும் இந்த ஊதியப் பிரச்னைகளை விரைந்து தீா்வு காணுமாறு ஆசிரியா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இந்த நிலையில், அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் அழைப்பின்பேரில், அவரை சென்னையில் உள்ள இல்லத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியா்கள் இயக்கத்தின் (எஸ்எஸ்டிஏ) சாா்பில் அதன் மாநில பொதுச் செயலாளா் ஜெ.ராபா்ட் உள்ளிட்ட நிா்வாகிகள் சனிக்கிழமை சந்தித்துப் பேசினா்.

இதுகுறித்து நிா்வாகிகள் கூறுகையில், ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தினோம். அப்போது கோரிக்கை குறித்த சில விவரங்களை அமைச்சா் கேட்டறிந்தாா். இதுகுறித்து முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அவா் தெரிவித்தாா். மேலும், ஓரிரு நாள்களில் இதுபற்றி அதிகாரிகளிடம் பேசிவிட்டு தகவல் அளிப்பதாகவும் அமைச்சா் தெரிவித்தாா் என்றனா்.

No comments:

Post a Comment