Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 6, 2022

திருவண்ணாமலை தீபம் வரலாறு: பல நூற்றாண்டு கதைகளை சுமக்கும் மகாதீபத்தின் அரிய தகவல்கள்

மிழ்நாட்டின் கார்த்திகை தீப திருவிழாக்களில் திருவண்ணாமலை தீப திருவிழாவுக்கு ஒரு முக்கிய இடம் இருக்கிறது.

இந்த தீப திருவிழாவின் வரலாறு என்ன?

திருவண்ணாமலை மாவட்டத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக நடைபெறும் கார்த்திகை தீப திருவிழா, கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குக் கொண்டாடப்படும்.

வட மாவட்டங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்கச் செல்கின்றனர்.

இந்த ஆண்டின் கார்த்திகை தீப திருவிழா, கடந்த நவம்பர் 27ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

டிசம்பர் 6ஆம் தேதி காலை நான்கு மணியளவில் அண்ணாமலையார் சன்னிதியில் பரணி தீபமும் மாலை ஆறு மணியளவில் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படும்.

5 அடி உயரமும் 250 கிலோ எடையும் கொண்ட கொப்பரையில் 3,500 லிட்டர் நெய் ஊற்றப்பட்டு, ஆயிரம் மீட்டர் காடா துணியால் ஆன திரியின் மூலம் இந்த மகாதீபம் ஏற்றப்படும்.

இந்த மகாதீபம் தொடர்ந்து பதினோரு நாட்கள் எரியும்.

மகாதீபத்தைக் காண லட்சக்கணக்கானவர்கள் குவிவார்கள் என்பதால், சுமார் 2700 சிறப்புப் பேருந்துகள் அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் இயக்கப்படவுள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள மிகப் பெரிய கோவில்களில் இந்த திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலும் ஒன்று.

சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ஒன்பது கோபுரங்களையும் ஆறு பிரகாரங்களையும் 142 சன்னதிகளையும் 306 மண்டபங்களையும் உள்ளடக்கிய திருக்கோவில் இது.

சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் கோயிலின் உள்ளேயே அமைந்துள்ளன.

இந்த கோவில், சோழர் காலம் துவங்கி நாயக்கர் காலம் வரை தொடர்ச்சியாக பல்வேறு மன்னர்களால் கட்டப்பட்டும், திருப்பணி செய்யப்பட்ட கோவில்.

கி.பி. 1565இல் தலைக்கோட்டைப் போரில் விஜயநகர பேரரசு வீழ்ந்த பிறகு, தமிழ்நாட்டை ஆண்டுவந்த நாயக்கர்கள் சுதந்திர மன்னர்களானார்கள். அந்த காலகட்டத்தில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பெருமளவில் மேம்படுத்தப்பட்டது. நீண்ட மதில்கள், ராஜகோபுரம், அழகு மிகுந்த சிற்பங்கள் உருவாக்கப்பட்டன.

கார்த்திகை தீபத்தின் பின்னணி

திருவண்ணாமலையின் மீது ஏற்றப்படும் கார்த்திகை தீபம் குறித்து எழுதப்பட்ட வரலாறு ஏதும் கிடையாது. இருந்தபோதும், திருவண்ணாமலையில், கார்த்திகைத் திருநாள் என்பது மிக முக்கியமான நாளாக இருந்ததை சில கல்வெட்டுகள் சுட்டிக்காட்டுகின்றன.

"அண்ணாமலையார் கோவிலில் கிடைத்த முதலாம் ராஜேந்திரச் சோழனின் 19ஆம் ஆண்டுக் கல்வெட்டு (கி.பி. 1031) கார்த்திகைத் திருநாளில் இறைவன் திருவேட்டைக்கு எழுதருளுவதைப் பற்றிக் கூறுகிறது.

'திருவண்ணாமலை உடையார் திருக்கார்த்திகைத் திருநாளில் திருவேட்டை எழுந்தருளி இருந்தால் பெந்திருவவமிர்தமெய்து செய்தருளவும் அடியார்க்குச் சட்டிச்சோறு பிரசாதஞசெய்தருளவும் குடுத்த பொன் ஏழு கழஞ்சில்' என்று அந்தக் கல்வெட்டுக் கூறுகிறது.

இதே மன்னனின் 27ஆம் ஆண்டுக் கல்வெட்டும், முதலாம் ராஜாதிராஜனின் 32ஆம் ஆண்டுக் கல்வெட்டும் இதுபோல கார்த்தித் திருநாள் தொடர்பான செலவுகளுக்கு அளிக்கப்பட்ட தானங்களைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

ஆனால், இந்த ஊரின் மலை மீது தீபம் ஏற்றப்பட்டது பற்றி சோழர்காலக் கல்வெட்டுகளில் ஏதும் இல்லை" என அரியலூர் அரசுக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் வரலாற்றுப் பேராசிரியருமான இல. தியாகராஜன் தனது கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

திருவண்ணாமலையில் மைசூரு கொப்பரை

இதற்குப் பிறகு, 1311ஆம் ஆண்டில் ஹொய்சாள மன்னரான வீரவல்லாளனின் கல்வெட்டு பஞ்சபர்வ தீப உற்சவம் பற்றிக் குறிப்பிடுகிறது. இந்த விழாவிற்கு இந்த மன்னர் 10 ஆயிரம் பொன் கொடை வழங்கியுள்ளதை இந்தக் கல்வெட்டு கூறுவதாகச் சொல்கிறார் தியாகராஜன்.

"ஸ்ரீவீர வல்லாள தேவராசக்ர சக வர்ஷம் ஆயிரத்திருநூற்ரு முப்பதொன்பத நளசம்வத்சரத்து மாசிமாசம் இருபத்திரண்டாந்தியதி செவ்வாய்க் கிழமையும் பெற்ற நாள் அருணகிரி அண்ணாமலை நாயனர்க்கும் உண்ணாமுலை நாச்சியார்க்கும் அமுதுபடிக்கும் சாத்துப்படிக்கும் பஞ்சபர்வ போத்சவத்துக்கும் திருநாளுக்கும் பஞ்சபர்வததுக்கும் பலபடி நிமந்தத்துக்கும் விட்ட பொன் பதினாயிரமும் இப்பொன் பதினாயிரத்துக்கு அண்ணாமலை நாயனார்க்கும் உண்ணாமுலை நாச்சியார்க்கும் அமுதுபடிக்கு நாள் க க்கு சந்தி மூன்றுக்கு ஆடி அருள அமுதுசெய்யவும் வீரவல்லாலதேவன் சந்திக்கு அமுதுபடி சாத்துப்படி வெஞ்சனத்துக்கு" என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது.

"ஆனால், பஞ்சபர்வதீப உத்சவம் என்பது மலை உச்சியில் தீபம் ஏற்றும் விழாவைக் குறிக்கிறதா என அறியமுடியவில்லை" என்கிறார் தியாகராஜன்.

திருவண்ணாமலை கோவிலில் 'மைசூரு கொப்பரை' என்ற மிகப் பெரிய கொப்பரை உள்ளது. "அந்த எண்ணெய்க் கொப்பரையில் கி.பி. 1746 நவம்பர் 20ஆம் தேதி எழுதப்பட்ட எழுத்து குறிப்புகள் உள்ளன.

இக்கொப்பரையில் எழுதப்பட்ட வாசகங்கள் அருணாச்சலேஸ்வர சுவாமிக்கு கிருத்திகை தீபாராதனை நடத்துவதற்கு சமஸ்தானத்திலே பிரதானி வெங்கிடபதிய்யா கொப்பரை வழங்கியது பற்றியும் அதன் எடை 41.2 பாரம் என்றும் கூறுகின்றன.

மைசூர் சமஸ்தானத்தில் உயர் அமைச்சராகப் பணியாற்றிய வெங்கடபதிய்யா என்பவர் இதனை வழங்கினார் எனலாம். இந்தப் பெரிய எண்ணெய்க் கொப்பரை தீபத் திருவிழாவுக்கு பயன்பட்டது எனலாம்," என்கிறார் தியாகராஜன்.

கல்வெட்டுகளைத் தவிர, திருவண்ணாமலையில் உள்ள சில மடங்களிலும் திருவண்ணாமலையார் கோவிலிலும் கிடைக்கும் செப்பேடுகளில் கார்த்திகை தீபத் திருவிழா குறித்த குறிப்புகளும் மலை மேல் தீபம் ஏற்றப்பட்டது பற்றிய குறிப்புகள் உள்ளன.

"ருத்ட்சமடம் ஸ்ரீரங்கதேவமகாராயர் சக வருஷம் 1456, கி.பி. 1534ஆம் வருட செப்பேட்டில் பின்வரும் வாசகங்கள் இடம்பெற்றுள்ளன: "இந்த தன்மத்துக்கு யாதாமொருவர் சகாயமய் நடப்பித்தவர்க திருக்கார்த்திகை திருவிளக்கு சேவித்த பலன் பெறுவார்கள்."

அதாவது, ஒரு குறிப்பிட்ட பூஜைக்கு சகாயம் செய்தவர்கள் கார்த்திகை திருவிளக்கு சேவித்த பலன் பெறுவார்கள் எனக் கூறப்பட்டிருக்கிறது.

அதேபோல, திருவண்ணாமலை பெரிய தெருவில் உள்ள 24 மனை தெலுங்கு செட்டியார் தலைவரிடம் கிடைத்த 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த செப்பேட்டில், 'மனப்பூறுவமாகவு அருணாசலமெண்டும் நினைக்க முத்தி தருவோமெண்ட அபைய அஸ்த்தம் காட்டிய திருக்கார்த்திகை தீபாராத்தினையில் தெரிசனம் பண்ணின' என்று குறிப்பிடப்படுகிறது.

அதாவது, இந்தச் செப்பேட்டில் திருவண்ணாமலையின் பெருமைகள் கூறப்பட்டுள்ளன. அவற்றில் அருணாச்சலம் என்னும் நினைக்க முத்திதரும் ஸ்தலம், அபயஹஸ்தம் காட்டிய திருக்கார்த்திகை' என்று இதற்கு அர்த்தம்" என்கிறார் தியாகராஜன்.

மலைகளில் தீபம் ஏற்றும் வழக்கம்

அதேபோல திருவண்ணாமலை திருக்கோவிலில் கிடைத்த 1788ஆம் ஆண்டு செப்பேடும் 1816ஆம் ஆண்டைச் சேர்ந்த தெலுங்குச் சேப்பேடும் இந்தக் கோவிலின் கார்த்திகைத் திருவிழாவைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

கல்வெட்டு ஆதாரங்கள், செப்பேட்டுச் செய்திகள் ஆகியவற்றைவைத்து, கார்த்திகை திருவிழா சோழர் காலத்திலிருந்து கொண்டாடப்பட்டிருக்கலாம் என்றும் மலை மேல் தீபம் ஏற்றும் நடைமுறை பிற்காலத்தில் ஏற்பட்டிருக்கலாம் என்றும் கூறுகிறார் தியாகராஜன்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கார்த்திகையை ஒட்டி மலைகளின் மீது தீபம் ஏற்றுவது நீண்ட கால வழக்கமாக இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கம்.

"மதுரையில் பெருமாள் மலை, அரிட்டாபட்டி, கீழக்குயில்குடி, திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களிலும் தீபங்கள் ஏற்றப்படுகின்றன.

இப்படி தீபங்கள் ஏற்றப்படும் மலைகள் அனைத்திலும் சமணர் தொடர்பான பள்ளிகளோ, சிற்பங்களோ உள்ளன. ஆனால், இந்தத் தீபத்தையும் கீழே உள்ள சிற்பங்களையும் தொடர்புபடுத்தும் வகையிலான கதைகள் ஏதும் மக்களிடம் இல்லை" என்கிறார் அவர்.

ஆனால், திருவண்ணாமலையைப் பொறுத்தவரை, மலைக்குக் கீழே சமண அடையாளம் ஏதும் கிடையாது. சிவபுராணம் சார்ந்த கதையே இங்கு சொல்லப்படுகிறது.

சைவ சமய நம்பிக்கைகளின்படி பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி தலமாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment