Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, December 12, 2022

சம வேலைக்கு சம ஊதிய விவகாரம்: இடைநிலை ஆசிரியர்கள் அமைச்சருடன் சந்திப்பு

பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை இடைநிலை ஆசிரியர்கள் சந்தித்து ஊதிய முரண்பாட்டைக் களைய வலியுறுத்தினர்.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ல் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170குறைந்துள்ளது. இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை ஆசிரியர்கள் தொடர்போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது.

இதற்கிடையே தங்கள் கோரிக்கையை நிறைவேற்றக் கோரி முதல்வரின் தனிப் பிரிவுக்கும், பள்ளிக் கல்வித் துறைக்கும் இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்து கடிதம் அனுப்புகின்றனர். மேலும், தொடர் போராட்டங்களில் ஈடுபட உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பில் அதன் மாநில நிர்வாகிகள் நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினர்.

நம்பிக்கை: இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ``ஊதிய முரண்பாட்டை சரிசெய்யும் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து அமைச்சரிடம் வலியுறுத்தினோம். விவரங்களைக் கேட்டறிந்த அமைச்சர், இது முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றும், துறையின் அதிகாரிகளிடம் பேசிவிட்டு ஓரிரு நாளில் தகவல் தருவதாகவும் உறுதியளித்தார். எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கைஉள்ளது'' என்றார்.

No comments:

Post a Comment