Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 1, 2023

சிறுநீரகக் கற்களைக் கரைக்குமா நெருஞ்சில் முள் பொடி?



சிறுநீரக கற்கள் உள்ளவர்கள், நெருஞ்சில் முள் பொடி சாப்பிட்டால் கல் கரையும் என்கிறார்களே...

உண்மையா? அதை எப்படி, எவ்வளவு சாப்பிட வேண்டும்? வாழைத்தண்டு சாறு குடித்தால் சிறுநீரக கல் கரையுமா?

சிறுநீரகக் கற்களைக் கரைப்பதில் நெருஞ்சில் முள் கஷாயம் நிச்சயம் உதவும். ஆனால் அது மட்டுமே தீர்வாகும் என நினைக்க வேண்டாம். சிறுநீரகங்களில் கற்கள் இருந்தால், சித்த மருத்துவரை சந்தித்து, கற்களின் அளவு, அது எந்த மாதிரியான கல் என்பதையெல்லாம் பார்த்து அதற்கேற்ப மருத்துவர் பரிந்துரையின் பேரில் சிகிச்சை எடுக்க வேண்டும்.

கல்லின் அளவு மற்றும் தன்மைக்கேற்ப கூடுதலாக சில சிகிச்சைகள் தேவைப்படும். அப்போதுதான் இந்தப் பிரச்னைக்கு முழுமையான தீர்வு கிடைக்கும்.

நெருஞ்சில் முள் சாதாரணமாக நிலங்களில் காணப்படுவதுதான். வெறும் கால்களில் நடக்கும்போது இந்த முள் குத்திய அனுபவம் பலருக்கும் இருக்கும். சிறுநீரகக் கற்களின் அளவு பெரிதாக இருக்கும்போது முதலில் அவற்றை உடைக்க வேண்டும். பிறகு வெளியே தள்ள வேண்டும். நெருஞ்சில் முள் கஷாயத்துக்கு சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் உண்டு.

சிறுநீரகக் கற்கள் இருந்தால் சிறுநீர்த் தொற்றும் வரும். அந்தத் தொற்று வராமல் தவிர்க்கவும் நெருஞ்சில் முள் உதவும். சிறுநீரகக் கற்களால் ஏற்படும் தொற்று, தொற்று இருப்பவர்களுக்கு சிறுநீரகக் கற்கள் இருப்பது என இரண்டுக்கும் இது உதவும். சிறுநீரகச் செயல்பாடுகளை ஊக்கப்படுத்தக் கூடியதும்கூட.

நெருஞ்சில் முள் பொடியை 10 கிராம் அளவு எடுத்துக்கொள்ளவும். அதை 200 மில்லி தண்ணீரில் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். எப்போதுமே கஷாயங்களை சிறுதீயில்தான் கொதிக்க வைக்க வேண்டும். அது 50 மில்லியாக வற்றியதும் வடிகட்டிக் குடிக்கலாம். நெருஞ்சிலுடன் ஓமம் மற்றம் சீரகம் தலா 5 கிராம் சேர்த்துக்கொள்ளலாம். விரும்பினால் தனியாவும் 5 கிராம் சேர்த்துக்கொள்ளலாம். இதை வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் கஷாயம் குடிப்பது ஏற்றுக்கொள்ளாது என்பவர்கள், சாப்பிட்டு அரை மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.

இதையே உணவாகவும் எடுத்துக்கொள்ளலாம். பச்சரிசியைக் கொதிக்கவைத்து, அதில் சீரகம், சின்ன வெங்காயம், நெருஞ்சில் முள் போன்றவற்றை துணியில் மூட்டையாகக் கட்டி கஞ்சியோடு சேர்த்துக் கொதிக்க வைப்பார்கள். கொதித்ததும் அந்த மூட்டையை அகற்றிவிடுவார்கள். பிறகு அந்தக் கஞ்சியைக் குடிக்கலாம்.

சிறுநீரகக் கற்கள் வராமலிருக்க நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும். சிறுநீரகத் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்க வேண்டும். வாழைத்தண்டு சாற்றுக்கு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் தன்மை உண்டு. ஆனால் நெருஞ்சில் முள் அளவுக்கு அது பலன் தராது. வாழைத்தண்டு சாற்றை அடிக்கடி குடிக்கக்கூடாது. நம் உடலில் சோடியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் ஓரளவுக்கு இருக்க வேண்டும்.

இவை குறைந்தாலும் பிரச்னை, கூடினாலும் பிரச்னை. அடிக்கடி வாழைத்தண்டு சாறு குடிக்கும்போது இந்தச் சத்துகளின் அளவில் மாற்றங்கள் ஏற்படலாம். அதன் விளைவாக தசைவலி வரலாம். அதனால் மருத்துவ ஆலோசனையோடு வாரத்துக்கு 2 நாள்கள் மட்டும் இதைக் குடிக்கலாம். வாழைத்துண்டு சாற்றுக்கு பதில், வாழைக்கிழங்கைத் தோண்டி எடுத்து அதன் தண்ணீரை அடிக்கடி குடிப்பது பலன் தரும்.

No comments:

Post a Comment