Friday, March 31, 2023

ஆசிரியருக்கு ஏன் தேவை பணிப் பாதுகாப்புச் சட்டம்?

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தாய் தந்தைக்குப் பிறகும் கடவுளுக்கு முன்பும் போற்றப்பட வேண்டியவர்கள் ஆசிரியர்கள் ஆவர். ஒவ்வொரு பெற்றோரும் தம் குழந்தைகளுக்கு இரண்டாவது ஆசிரியராகவும் அதுபோல் ஒவ்வொரு ஆசிரியரும் பள்ளிப் பிள்ளைகளுக்கு இரண்டாவது பெற்றோராகத் திகழ வேண்டும் என்பது சமுதாயத்தின் எதிர்பார்ப்பாகும். ஒருவர் தம் வாழ்வில் எப்போதும் தாம் ஒரு நல்ல மாணவராகவே விளங்க வேண்டும் என்பதையே தம் குறிக்கோளாகக் கொண்டு முன்னேற்றம் கண்டவர்கள் பலர் என்பது கண்கூடு.

ஆசிரியர் வேலை என்பது தொழில் அல்ல. அஃதொரு பணியாகும். ஒரு நல்ல ஆசிரியர் வெறும் கூலிக்கு மாரடிக்க ஒருபோதும் விரும்ப மாட்டார். அதுபோல், தம் நல்ல அறிவுஞானம் முழுவதையும் அணுவளவும் விடுபடாமல் ஒவ்வொரு குழந்தைக்கும் எப்பாடுபட்டேனும் தம் கற்பித்தல் வழியாகக் கடத்திவிட ஒவ்வொரு நாளும் முயற்சித்துக் கொண்டே இருக்கின்றார். விதை நெல்லுக்கு ஆகும் செலவை யாரும் கணக்குப் பார்க்க மாட்டார்கள். ஆசிரியர் பணியும் அத்தகையது. ஆசிரியர் பணியில் காணப்படும் ஊதிய முரண்பாடுகளும் குறைபாடுகளும் ஏராளம் இருப்பினும் அதனூடாக நிகழ்த்தப்படும் ஆசிரியர் விரோத போக்குகள் மலிந்த போதும் தாயுள்ளத்துடன் குழந்தைகளை வகுப்பறைகளில் எந்தவொரு ஆசிரியரும் அறிவுப்பசிப்பிணி போக்க தவறுவதில்லை.

இன்றைய சூழ்நிலையில் ஆசிரியர் பணியானது நெருப்பாற்றை ஒவ்வொரு கணமும் நீந்திக் கடப்பதற்கு ஈடாக உள்ளது. எந்நேரமும் ஏதேனும் ஓர் அபாய நிலையில் தம்மைத் தாமே உருக்கிய நிலையில் சுடர் ஒளி உமிழ வேண்டிய துர்பாக்கிய நிலையில் ஆசிரியர் சமூகம் இருப்பது வேதனைக்குரியது. கோடிக்கைகள் கொண்ட மூச்சு விடும் நிணமும் குருதியும் உள்ள நவீன மனித எந்திரனாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் இன்றைய ஆசிரியருக்கு இருப்பது அறியத்தக்கது.

அரசின் இணையவழிப் பதிவேற்றப் பதிவுகள் மற்றும் பதிவேடுகள் உருவாக்குதலும் பராமரிப்புச் செய்தலும் உள்ளிட்ட பள்ளி சார்ந்த பணிகளும், இல்லம் தேடிக் கல்வி, புதியபாரதம், சத்துணவு வழங்குதல் மற்றும் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட பள்ளி சாராத வேலைகளும், மக்கள்தொகை, பொருளாதார கணக்கெடுப்பு, தேர்தல் பணி உள்ளிட்ட தேசிய கட்டாயம் பங்கெடுப்புகளும் மாணவர் உடல்நலம் சார்ந்த மருத்துவ சேவைகளும் பணியாளர் வாராத நாள்களில் பள்ளித் துப்புரவுப் பணிகளும் பருவங்கள் தோறும் அவ்வப்போது வழங்கப்படும் பதினான்கு வகையான பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடைகள், கற்றல் கற்பித்தல் கருவிகள், காலணிகள் முதலான நலத்திட்ட உதவிகளைத் தூக்கிச் சுமந்து சேர்க்கும் கடைநிலை ஊழியங்களும் என முதுகெலும்பு முறியும் பல்வேறு வேலைகளுக்கிடையில் கற்பித்தல் பணியாற்ற வேண்டிய சூழலில் தற்போதைய ஆசிரியர்கள் உள்ளனர்.

இத்தகைய துறை சார்ந்த அகவய பணி நெருக்கடிகளுக்கிடையில் செம்மையாகப் பணிபுரிந்து வரும் ஆசிரியப் பெருமக்களுக்கு அண்மைக்காலமாகப் பல்வேறு நெறிபிறழ் மாணவர்கள் மற்றும் கண்மூடித்தனமாக பெற்றோர்கள் உள்ளிட்ட புறவய நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தல் மலிந்து வருவது எண்ணத்தக்கது. நின்றால் குற்றம்; நடந்தால் குற்றம் என்பதுபோல அச்சு மற்றும் காட்சி ஊடகங்கள் வணிகப் போட்டி காரணமாகத் தம் கோரப்பசிக்கு ஆசிரியர்களையும் மாணவர்களையும் இரையாக்கி வருவது குறிப்பிடத்தக்கது. அனைத்தும் இங்கு ஊதிப்பெருக்க வைக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்படுவதும் செய்தியின் உண்மைத்தன்மை உணராது பரப்புரை செய்யப்படுவதும் அதற்கு உடனடியாக எதிர்வினை நிகழ்த்துவதும் அதனையே உண்மை என்று குருட்டுத்தனமாக நம்புவதும் அதிகரித்து வருவது நல்லறமாகா.

ஆசிரியர்கள் மீதான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கொண்டிருக்கும் மதிப்புகளில் இன்று பேரிடி விழுந்துள்ளது. எனினும், இன்றும் பல கிராமங்களில் உள்ள பெற்றோர்கள் தம் இல்ல சுக, துக்க நிகழ்வுகளில் உள்ளூர் ஆசிரியப் பெருமக்களை சாதி, மதம் பாராமல் தம் நெருங்கிய உறவினர்களாக நினைத்துப் பாவித்து அவை சார்ந்த அழைப்பிதழ்களில் பெயரை அச்சடித்துப் பெருமை சேர்த்து வருவது குறிப்பிடத்தக்கதாகும். எனினும், ஆசிரியர் பற்றிய மதிப்பீடுகள் சமுதாயத்தில் சரியவும் சீர்குலையவும் காரணமானவர்களாக முற்றிலும் தடம் புரண்ட மாணவர்களையும் மரியாதை குன்றிய சமுதாயத்தினரையும் குற்றம் சுமத்துவது என்பது சரியல்ல.

ஆசிரியர்கள் அனைவரும் யோக்கியமானவர்கள் என்று கூறுவது பேதைமையாகும். அது இங்கு நோக்கமுமல்ல. யோக்கியமானவர்கள் பலர் ஆசிரியர்களாக இருக்கின்றனர் என்பது மட்டும் உண்மை. அப்படியிருக்க, மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமுதாயத்தினருள் ஒரு சிலர் ஆசிரிய சமுதாயத்தின் மீது வன்மமும் அவமதிக்கும் குறுகிய எண்ணமும் கொண்டு செயல்படுவது என்பது சகிப்பதற்கில்லை. கட்டுப்பாடு அற்ற சுதந்திரத்தை கட்டவிழ்த்து விட்டதன் விளைவு ஆசிரியர்கள் மீதான விரோதமும் குரோதமும் வளர காரணமாகி விட்டது. தாம் என்ன செய்கிறோம் என்று அறியாதோரை மன்னித்து மறந்து விடலாம். தம் வகுப்பு அல்லது பாட ஆசிரியரை எந்தவகையில் எல்லாம் சிறுமைப்படுத்த முடியும் என்று திட்டமிட்டு கேலியும் கிண்டலும் தெனாவெட்டும் எண்ணம், சொல், செயலில் காட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

ஆசிரியர்களுள் ஒரு சிலர் வெளிப்படையாகக் காட்டும் குணக்கேடான முகம் சுளிக்க வைக்கும் செய்கைகளால் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகமும் கழுவிலா தொங்க முடியும்? தாம் ஆசிரியர் என்பதைத் துறந்து பள்ளிக்கு வருவதில் தொடர்ந்து ஒழுங்கீனம், காரண காரியம் இல்லாமல் தகவல் தெரிவிக்காமல் தொடர் விடுப்பில் இருத்தல், குடிநோயாளியாகி பொதுவிடங்களில் அருவருக்கத்தக்க வகையில் கிடத்தல், வகுப்பறையில் தொடர்ந்து பாடம் எடுக்காமை, பிஞ்சுக் குழந்தைகளிடம் பாலியல் தொடர்பான சீண்டல்கள் மற்றும் அத்துமீறல்களில் மறைமுகமாக ஈடுபடுதல், சாதியத் திமிருடன் நடந்து கொள்ளுதல், தாம் மேற்கொள்ளும் பிற வருவாய் ஈட்டும் தொழில்களில் அல்லது வேலைகளில் வெளிப்படையாக முழுநேரமும் மூழ்கியிருத்தல், போதைப்பொருள்களை வகுப்பறையில் மாணவர்கள் முன்னிலையில் பயன்படுத்துதல் போன்ற தீய செயல்கள் புரியும் நச்சுச்செடிகளைக் கவனமுடன் களையெடுப்பதில் அரசு இயந்திரம் ஒருபோதும் மெத்தனம் காட்டக் கூடாது. உண்மையிலேயே ஒரு நல்லவருக்கு நியாயமாகப் கிடைக்க வேண்டிய எல்லாவிதமான மாலையும் மரியாதையும் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடும் தீயவர்களுக்கு அநியாயமாகப் போய்ச் சேருவதால் ஏற்படும் நீறுபூத்த கோபம் ஊருக்கு இளைத்த எளிய ஆசிரியரிடம் கண்மூடித்தனமாக, தாறுமாறாக வெளிப்படுத்தப்படுகின்றன.

பள்ளி இறுதி நாட்களில் வகுப்பறையில் காணப்படும் தளவாடப் பொருள்களுக்குப் பெரும் சேதம் விளைவித்தல், ஆசிரியரைச் சுற்றிச் சுற்றி வந்து கும்மியடித்தல், மறைமுகமாகச் சீண்டி விளையாடுதல், குறிப்பாக பெண் ஆசிரியைகளைத் தவறான கண்ணோட்டத்தில் குற்றவுணர்ச்சியே இல்லாமல் உற்று நோக்குதல், உருவ கேலி செய்தல், தவறான வகையில் நடத்துக் காட்டுதல், கொஞ்சம் கூட கீழ்ப்படியாதிருத்தல், வகுப்பறையில் அத்துமீறி தவறிழைத்தல், போதைப்பொருள் நுகர்தல், தடை செய்யப்பட்ட ஆபாச காணொலிகளைக் கண்டு மகிழ்தல் மற்றும் சக குழுவில் பகிர்தல், வயதுக் கோளாறு காரணமாக மேற்கொள்ளும் கூடாப்பழக்கம் குறித்து அக்கறை படும் ஆசிரியர்கள் மீது வீண் பழி சுமத்துதல் மற்றும் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தித் தண்டித்தல், மரியாதை குறைவாக பள்ளி வளாகத்திற்குள் நடந்து கொள்ளுதல், தட்டிக் கேட்கும் ஆசிரியரிடம் எகிறுதல், நிலைமை கைமீறிப் போகும் போது அடியாட்களாகப் பெற்றோர் அல்லது உறவினரை அழைத்து வந்து மிரட்டுதல், அச்சுறுத்துதல் மற்றும் கொலைவெறித் தாக்குதலில் ஈடுபடுதல், மேலும் உயிர்ச் சேதம் விளைவித்தல் என அண்மைக்கால ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம்! ஏராளம்.

மாணவர்கள் தாம் வகுப்பறைகளில் வேண்டுமென்றே கிழித்துப் போடும் குப்பைகளையும் அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் மற்றும் போதிய பாதுகாப்பு வசதியின்மையால் ஊரார் அசிங்கப்படுத்தி வைக்கும் பள்ளிக் கழிவறைகளையும் பகுதிநேர துப்புரவுப் பணியாளர் பணிக்கு வராத காலங்களில் ஆசிரியர்கள் தாம் செய்யவேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு தனிநபரும் தாம் பயன்படுத்திய ஓய்வறையைத் தாமே சுத்தப்படுத்துவது என்பது இன்றியமையாத கடமையாகும். பள்ளிகளில் தொன்றுதொட்டு கற்பிக்கப்பட்டு வரும் வாழ்வியல் திறன்களை இங்கு கற்றுக் கொள்ளாமல் நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குத் தயார்படுத்தும் கொள்ளை இலாபம் ஈட்டும் வணிகக் கற்றல் சிறப்பு வாழ்க்கைத் திறன் மேம்பாட்டு மையங்களிலா மாணவர் கற்பர்?

ஓர் ஆசிரியர் உடலாலும் மனத்தால் எந்தவொரு மாணவரையும் காயப்படுத்துதல் என்பது தகாத செயலாகும். தன் நிலையை மறந்து இதனை மீறும் ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க எத்தனையோ உகந்த வழிகள் உள்ளன. அதனை விடுத்து குடிகாரருடன் வந்து மிரட்டுவதும் குருபக்தியைக் காலில் போட்டு மிதித்து வயதிற்கு மீறி தாமே தாக்க முற்படுவதும் பள்ளிக்குள் புகுந்து உயிருக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் விதமாகக் குடும்பமாகத் தாக்கிக் காயப்படுத்துவதும் என்பன மனிதத்தன்மையற்ற செயலாகவே கருதப்படும்.

இத்தகு சூழலில், உயிரைக் காக்கப் போராடும் மருத்துவருக்கு இருப்பது போன்ற ஒரு பணிப் பாதுகாப்புச் சட்டம் உள்ளத்தைப் பண்படுத்தும் ஆசிரியர் சமூகத்திற்கு இதுநாள் வரை இல்லாதது நீதிக்குப் புறம்பானதாகும். இந்த நாட்டில் தீங்கு விளைவிக்கும் விலங்குகளுக்குக் கூட பாதுகாப்புச் சட்டம் உள்ளது. ஆசிரியர் உயிர் இழிவாகியும் மலிவாகியும் போனதோ?! ஆசிரியர் மனசைக் கேட்டறியும் எல்லோருக்குமான இந்த விடியல் அரசுக்கு ஆசிரியர்களின் உயிரையும் உடைமையையும் சுய மரியாதைக்குச் சற்றும் குறைவில்லாமல் பாதுகாத்து அரண் அமைத்துத் தரவேண்டிய கடமையும் பொறுப்பும் இருப்பதைத் தட்டிக் கழிக்க இயலாது. சென்னையில் பட்டப்பகலில் வகுப்பறையில் ஒரு மாணவனால் ஓர் இளம் ஆசிரியை ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டபோதே ஆசிரியர் நலன் காப்பதாகக் கூறிக்கொள்ளும் ஆசிரியர் இயக்கங்கள் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற குருதிப்புனல் பெருக்கும் சம்பவங்கள் நடைபெறாமலிருக்க அன்றைய அரசை வலியுறுத்தி ஏனைய ஆசிரியர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்திருக்க வேண்டும்.

இப்போதாவது விழித்துக் கொள்வது புத்திசாலித்தனமாகும். ஆசிரியர்கள் தரப்பின் நியாயம் உணர்ந்து அரசும் ஆசிரியர் பணிப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்வதும் அதற்குரிய வரைவை உருவாக்குவதும் நம்பிக்கை அளித்து உதவிட முன்வருதல் இன்றியமையாதது. ஆளாளுக்கு பள்ளிக்குள் புகுந்து அடிக்க தாயில்லாத அநாதைகள் அல்லர் ஆசிரியர்கள். ஒரு குற்ற நிகழ்வு நடந்த பின்னர் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட கடும் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியதுதான். எனினும், பொதுவெளியில் நிகழ்த்தப்பட்ட அவமரியாதைக்கும் இழிவுபடுத்த முனைவதற்கும் அதனால் ஏற்படும் காலத்தால் அழியாத வடுவிற்கும் மனவேதனைக்கும் மருந்துளதோ? இந்த ஆசிரியர்களைக் கேட்பதற்கு ஒரு நாதியும் இங்கில்லை என்கிற தைரியம் தானே இந்த கொடும்பாதக செயலுக்குக் காரணம் என்பதை அரசாங்கம் முதலில் உணருதல் நல்லது. ஆதலால், காலம் தாழ்த்தாமல் அவசர அவசியம் கருதி ஆசிரியர் பணிப்பாதுகாப்புச் சட்டம் இயற்றும் நடவடிக்கையைத் துரிதப்படுத்த முன்வர வேண்டும். இதுவே தக்க தீர்வாக அமையும்.

எழுத்தாளர் மணி கணேசன்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application