Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, April 15, 2023

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு

மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் நடத்த உள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுக்கு அனைத்து மாவட்டங்களிலும் கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்ட அறிவிப்பு: மத்திய பணியாளர்கள் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையிலான தேர்வு - 2023 தொடர்பான அறிவிப்பினை கடந்த 3ம் தேதி வெளியிட்டுள்ளது. ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அரசியலமைப்பு சார்ந்த அமைப்புகள், சட்டப்பூர்வ அமைப்புகள், தீர்ப்பாயங்கள் போன்றவற்றில் உள்ள குரூப் 'பி' மற்றும் குரூப் 'சி' நிலையில், 7,500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை அறிவித்துள்ளது.

இத்தேர்வில் நாட்டில் உள்ள தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். பணியிடங்களின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித் தகுதி, செலுத்தவேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற விவரங்கள் ஆள்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக வழங்கப்பட்டுள்ளது. இப்பணி காலியிடங்களுக்கு www.ssc.nic.in என்ற பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். கணினி அடிப்படையிலான இத்தேர்வுகளுக்கு உரிய கட்டணத்துடன் இணைய வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் மே 3ம் தேதி மற்றும் ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள் மே 4ம் தேதி.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு, ஜூலை 2023ல் ஆந்திர மாநிலத்தில் 10 மையங்களிலும், புதுச்சேரியில் 1 மையத்திலும், தமிழ்நாட்டில் 7 மையங்களிலும், தெலங்கானா மாநிலத்தில் 3 மையங்களிலும் ஆக மொத்தம் 21 மையங்களில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வப் பயிலும் வட்டங்களில் பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வுகளுக்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நேரடியாக நடத்தப்பட உள்ளன.

இத்தேர்விற்கான பாடத்திட்டங்கள் மற்றும் பாடக்குறிப்புகள் தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மெய்நிகர் கற்றல் இணையதளத்தில் (https://tamilnaducareerservices.tn.gov.in/) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த இணையதளத்தில் 'TN Career Services Employment மற்றும் அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் 'AIM TN' என்ற யூடியூப் சேனல்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள இத்தேர்விற்கான காணொலிகளை கண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, இத்தேர்விற்கு விண்ணப்பித்த மற்றும் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் உரிய மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை தொடர்பு கொண்டு இப்பயிற்சி வகுப்புகளில் கலந்துகொண்டு பயனடையலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment