தமிழக பள்ளி மாணவர்கள் அனைவரும் புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகளை எதிர்நோக்கி உள்ளனர். இவர்களில், கடந்த 2022-2023 ஆம் கல்வி ஆண்டுக்கான பொதுத் தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவர்களுக்காக தமிழக அரசு ஜூன் ஜூலை மாதங்களில் துணைத் தேர்வுகளை நடத்தி அவர்களது மேற்படிப்புக்கு பல்வேறு கட்ட ஏற்பாடுகளை செய்து வருகிறது.
மேலும், கடந்த கல்வி ஆண்டில் இறுதி தேர்வில் தோல்வி அடைந்த, தேர்வுக்கே வராத மற்றும் பள்ளிக்கு வருகை புரியாத மாணவர்களை இனம் கண்டு அவர்களது மேற்படிபுக்கும் அரசு தற்போது சிறந்த வழி வகை செய்ய உள்ளது. அதாவது, ஒருங்கிணைந்த கல்வி சார்பில் ‘தொடர்ந்து கற்போம்’ என்ற திட்டத்தை 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு, ஜூன் 1ம் முதல் ஜூன் 30 வரை அவர்களது பள்ளியில் உள்ள மேல்நிலை மற்றும் உயர்நிலை பட்டதாரி ஆசிரியர்களை கொண்டு சிறப்பு வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வகுப்புகளானது, திங்கட்கிழமை முதல் சனி கிழமை வரை காலை 9 மணி முதல் மாலை 5மணி வரை நடத்தப்படவுள்ளது. இதில், சனிக்கிழமைதோறும் வழிகாட்டுதல், ஊக்கமூட்டுதல் போன்ற வகுப்புகளும், மாணவர்களை துணைத் தேர்வுக்கு தயார்படுத்த சிறப்பு ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment