தமிழகத்தில் நேற்றுடன் ஓய்வுபெற்ற ஆயிரம் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு, நடப்பு கல்வியாண்டு இறுதிவரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறையின் இந்த நடவடிக்கைக்கு ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள், முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்கள் என ஆயிரக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் வயதுசார்ந்து, ஒரு கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெற்றால் அந்த பள்ளி மற்றும் வகுப்பு மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர்களின் நலன்கருதி, அந்த கல்வியாண்டின் இறுதிவரை பணிநீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
இதனிடையே இந்த நடைமுறை, கடந்த ஆண்டு திடீரென விலக்கி கொள்ளப்பட்டது. இதனால், ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து, நடப்பாண்டு ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு, கல்வியாண்டின் இறுதிவரை பணிநீட்டிப்பை மீண்டும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவொளி மற்றும் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி உடனான கலந்துரையாடல் கூட்டத்திலும், சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதிலளித்திருந்தார். இதனிடையே, மாநிலம் முழுவதும் அரசு துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் 1,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் நேற்றுடன் ஓய்வுபெற இருந்தனர். இந்நிலையில், மாணவர்களின் நலன்கருதி அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் ஆயிரம் தலைமை ஆசிரியர், முதுகலை, பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முழுவதும் பணிநீட்டிப்பு வழங்கி மறுநியமனம் செய்யப்பட்டது.இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகிகள் கூறுகையில், ''தமிழக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த ஏராளமான ஆசிரியர்கள் நேற்றுடன் ஓய்வுபெற இருந்தனர்.
தற்போது ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, பள்ளி நலன் மற்றும் மாணவர்கள் நலன் கருதி, அவர்களுக்கு கல்வியாண்டின் இறுதிவரை பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்காக பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கும், இயக்குநர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ஆசிரியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து பாராட்டுகிறோம்" என்றனர்.
No comments:
Post a Comment