Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 29, 2023

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு செப்.1-ல் வகுப்புகளை தொடங்க வேண்டும்: மருத்துவ ஆணையம் அறிவுறுத்தல்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.

அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் 15 சதவீதம் எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது.

இந்த இடங்கள் மற்றும் எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை, மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் (டிஜிஎச்எஸ்) மருத்துவக் கலந்தாய்வு குழு (எம்சிசி) ஆன்லைனில் நடத்தி வருகிறது.

அரசு கல்லூரிகளின் 85 சதவீத இடங்கள், தனியார் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை அந்தந்த மாநில அரசுகள் நடத்தி வருகிறது. இந்நிலையில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.1-ம் தேதி தொடங்கப்படவுள்ளது.

இதுதொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் செப்.1-ம் தேதி தொடங்க வேண்டும். அதற்குள்ளாக கலந்தாய்வை நிறைவு செய்ய வேண்டும். கலந்தாய்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த அனைத்து சனி, ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை தினங்களை வேலைநாட்களாக கருதி பணியாற்ற வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில், தமிழகத்திலும் கலந்தாய்வு தொடங்கப்பட்டுள்ளது. வகுப்புகள் தொடங்க ஒரு மாதத்துக்கும் மேல் அவகாசம் இருப்பதால், அதற்குள்ளாக மாநில இடங்களுக்கான மாணவர் சேர்க்கை நிறைவடைந்துவிடும். தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்த தேதியில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகளைத் தொடங்க தமிழகம் தயாராக உள்ளது' என்றனர்.

No comments:

Post a Comment