Sunday, July 23, 2023

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதி பெற்றுள்ள 80 மாணவர்களுக்கும் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க இடம் கிடைக்கும்

மாற்றுத் திறனாளிகள் பிரிவில் தகுதி பெற்றுள்ள 80 மாணவ, மாணவிகளுக்கும் அரசு கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைக்குமென்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2023-24-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 25-ம் தேதி தொடங்கவுள்ளது. மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசு, விளையாட்டு வீரர் பிரிவுகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் நேரடியாக நடைபெறவுள்ளது. பொதுப்பிரிவு கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது.

ராணுவ வீரர் வாரிசுகளுக்கு..: இந்நிலையில், அரசு ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு சிறப்பு பிரிவில் தகுதி பெற்றுள்ள விண்ணப்பதாரர்கள் குறித்த பட்டியல் www.tnhealth.tn.gov.in மற்றும் www.tnmedicalselection.org ஆகிய சுகாதாரத்துறை இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஒதுக்கபட்டுள்ள 10 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடங்களுக்கு 328 பேரும் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 எம்பிபிஎஸ், 1 பிடிஎஸ் இடங்களுக்கு 114 பேரும் தகுதி பெற்றுள்ளனர்.

பொதுப்பிரிவில் சேர்ப்பு: அதேநேரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 215 எம்பிபிஎஸ், 11 பிடிஎஸ் இடங்களுக்கு 80 மாணவ, மாணவிகள் மட்டுமே தகுதி பெற்றுள்ளதால், அந்த 80 பேருக்கும் அவர்கள் விரும்பும் கல்லூரிகளில் இடம் கிடைத்துவிடும். மீதமுள்ள இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்படுமென்று மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News