Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 3, 2023

பகலில் குட்டித் தூக்கம் போடுவது நல்லதா... லண்டன் பல்கலைக்கழக புதிய ஆய்வு சொல்வதென்ன?

உடலின் மிக முக்கியமான உறுப்பு மூளை. அதுதான் நம் செயல்களையும் எதிர்வினைகளையும் ஒன்றிணைத்து கட்டுப்படுத்துகிறது.

சிந்தனைக்கும் எண்ணங்களுக்கும் புத்திக் கூர்மைக்கும் மிகவும் முக்கியமானது மூளைதான் என்பதில் சந்தேகமில்லை. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த மூளையைப் புத்துணர்ச்சி பெற வைப்பது, தூக்கம்தான்.

பகலில் சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடுவது பலருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால், பகலில் தூங்குவது நல்லதா, கெட்டதா என்பதில் பலரிடையே குழப்பம் உள்ளது. பெரும்பாலானவர்கள் பகலில் உறங்குவது உடலுக்கு நல்லதல்ல என்று நினைக்கிறார்கள். ஆனால், பகலில் அரைமணி நேர உறக்கம் என்பது, மூளையின் செயல்பாடுகளுக்கும் மூளையின் செல்களுக்கும் நல்லது என்கின்றன ஆய்வு முடிவுகள்.

சமீபத்தில் லண்டன் பல்கலைக்கழக ஆய்வகம் நடத்திய ஆய்வில், பிற்பகலில் தூங்குபவர்களின் மூளை பெரிதாவதைக் கண்டறியப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் 20- 30 நிமிடங்கள் வரை உறங்குவதுதான் உடலுக்கு நல்லது என்பதும் இதில் தெரிய வந்துள்ளது.

பொதுவாக, மூளையில் செயல்பாடுகளைத் தீர்மானிக்கக் கூடிய, டி.என்.ஏ.வில் உள்ள 97 துணுக்குகள், நம்மை தூங்குபவர்களாகவோ அல்லது சுறுசுறுப்பானவர்களாகவோ செயல்பட வைக்கும். இதை வைத்து , 40 முதல், 69 வயதுள்ள 35,000 நபர்களிடம் மரபணுச் சோதனையை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர்.

இதில், பகலில் குட்டித் தூக்கம் போட்டவர்களின் மூளை, 15 கன சென்டிமீட்டர் அளவுக்கு வேறுபட்டுள்ளது. உறக்கத்தை மேற்கொள்ளாதவர்களை விட பகலில் சிறிது நேரம் உறங்குபவர்களின் வயது 2.6 முதல், 6.5 வருட வயது முதிர்வைக் குறைக்கிறது என்கிறது இந்த ஆய்வு. இதன் முடிவுகள் ஸ்லீப் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

உடல் எடையைக் குறைப்பது, உடற்பயிற்சி செய்வதைவிட, பகல் நேரத்தில் சிறிது உறங்குவது ஏராளமான பலன்களைத் தரும் என்கிறார் ஆய்வாளர் டாக்டர் கார்பீல்ட். வயதாக வயதாக மூளை சுருங்குவதோடு அதன் செயல்பாடுகளும் குறையும். சரியான நேரத்திற்கு உறங்குவதன் மூலம், வயது முதிர்வால் ஏற்படும் முழு மறதி நோய் (Alzheimer's disease), நரம்புச் சிதைவு (Neurodegeneration) போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.
மூளைதூக்கமின்மை... ஆபத்தின் அறிகுறி! - காரணங்கள், தீர்வுகள், ஆலோசனைகள்

தூக்கமின்மை, சரியான நேரத்திற்கு உறங்காமலிருப்பது போன்றவை, மூளையின் செயல்பாட்டைச் சிதைப்பதோடு மட்டுமில்லாமல் மூளை செல்களையும் பாதிக்கும்.

எடின்பர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் மற்றும் பிரிட்டிஷ் நரம்பியல் சங்கத்தின் தலைவர் தாரா ஸ்பைர்ஸ் ஜோன்ஸ் கூறுகையில், ``வார இறுதியில் சிறிது நேர உறக்கம் என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தரும். பகல் நேரங்களில் உறங்குவது சோம்பேறித்தனமாகாது. மூளைச் செயல்பாட்டிற்கு அது நல்லது என்று இந்த ஆய்வு நிரூபித்துக் காட்டியுள்ளது. பகலில் நீண்டநேர உறக்கத்தை ஆய்வாளர்கள் ஆதரிக்கவில்லை; அதேநேரம், அரைமணி நேர ஆழ்ந்த உறக்கம்தான் மூளையின் செல்களுக்கு நல்லது" என்றார்.

No comments:

Post a Comment