Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 30, 2023

ஆசிரியர் பணியிடங்கள் மிக விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கொரோனா காலத்தில் முடங்கி இருந்த மாணவ-மாணவிகளை மேம்படுத்தும் விதமாக "ராக்கெட் சயின்ஸ்" என்ற பெயரில் ஆன்லைன் பயிற்சி திட்டம், 2022-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி தொடங்கப்பட்டது. இதில் அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இவர்களுக்கு மூத்த விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பயிற்சி அளித்தார்.

தற்போது அதில் பங்கேற்ற அரசு பள்ளி மாணவர்களில் சிலர் ரஷியாவில் உள்ள "யூரி ககாரின்" விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட இருக்கின்றனர். ரஷிய விண்வெளி ஏவுதளத்தை பார்வையிடுவதற்காக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் 50 மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி, சென்னை கஸ்தூரி ரங்கன் சாலையில் உள்ள ரஷிய கலாசார மைய வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார்.

நிகழ்ச்சி முடிந்ததும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நிருபர்களிடம் கூறியதாவது:-

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவுக்கு ரஷியா அதிக உதவிகள் செய்துள்ளது. அங்கு நம் பள்ளி மாணவர்கள் செல்வது மகிழ்ச்சியாக உள்ளது. எந்திர கற்றல், செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் உள்ளிட்டவைகளை கற்றுக்கொள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

விஞ்ஞானி சிவதானு பிள்ளை போல் பலர் பள்ளி மாணவர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டுவரும் நிலையில் அரசு சார்பிலும் அவர்களுக்கு தேவையானவற்றை செய்ய முதல்-அமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்

ஆசிரியர் சங்கங்களுடன் தனித்தனியாக பேசி இருக்கிறோம். அவர்களின் 10 கோரிக்கைகள் தொடர்பாக நிதி அமைச்சருடன் பேச இருந்தோம். ஆனால் முதல்-அமைச்சருடன் அவர் சந்திக்க வேண்டியிருந்ததால், எங்களுடைய சந்திப்பு தள்ளிப்போனது.

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் சந்தித்தபோதுகூட நிதி அமைச்சரிடம் அது பற்றி பேசியிருக்கிறேன். அவர் சென்னை வந்த பிறகு, நானும், எங்கள் துறை முதன்மைச்செயலாளரும் இணைந்து பேசி முதலில் எந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பது என்பது பற்றி ஆலோசித்து, முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம்.

ஆசிரியர் பணியிடங்கள் குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிப்புகள் வர உள்ளது. மிக விரைவில் அனைத்து ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நல்ல விஷயத்தில்...

இதையடுத்து அவரிடம், 'தமிழ்நாட்டின் கல்வித்துறை சி.ஆர்.எஸ். நிதியையும், மத்திய அரசு கொடுக்கும் நிதியையும் சரியாக பயன்படுத்துவதில்லை என்று கவர்னர் கூறியிருக்கிறாரே?' என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, 'மத்திய அரசு வழங்கக்கூடிய நிதியை அதிகளவில் நல்ல விஷயத்தில் பயன்படுத்தக்கூடிய துறை பள்ளிக்கல்வித்துறைதான். கவர்னர் எதில் சரியாக நிதியை பயன்படுத்தவில்லை என்று குறிப்பிட்டு சொன்னால், அதற்கு விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறோம். அதேபோல், சி.ஆர்.எஸ். செயல்பாட்டை பொறுத்தவரையில், நல்ல விஷயத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் அது. நல்ல விதத்தில் அது பயன்படும்' என்றார்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News