Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, August 6, 2023

அண்ணாமலைப் பல்கலை . தொலைநிலை கல்வி இயக்ககத்தில் 125 படிப்புகள் மீண்டும் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் நிகழ் கல்வியாண்டு முதல் (2023 - 24) மீண்டும் 27 பட்டம், பட்ட மேற்படிப்புகள் உள்ளிட்ட 125 படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளதாக துணைவேந்தா் ராம.கதிரேசன் தெரிவித்தாா்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் 2023 - 24ஆம் கல்வியாண்டுக்கான விண்ணப்ப விநியோகத்தை துணைவேந்தா் ராம.கதிரேசன் தொடங்கிவைத்தாா்.

நிகழ்வில் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.பிரகாஷ், சிண்டிகேட் உறுப்பினா்கள் அரங்கபாரி, அறிவுடைநம்பி சுதா்சன், புல முதல்வா்கள் விஜயராணி, காா்த்திகேயன், ராமசாமி, அருள்செல்வி, மக்கள் தொடா்பு அதிகாரி ரத்தினசம்பத், துணைவேந்தரின் நோ்முக உதவியாளா் ஹெச்.பாக்கியராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா், துணைவேந்தா் ராம.கதிரேசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் 2012-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் தொலைதூரக் கல்வி வழிகாட்டுதல் குழு மேற்பாா்வையில் இயங்கி வந்தது. அப்போது, 300-க்கும் மேற்பட்ட பட்ட, பட்ட மேற்படிப்புகள் செயல்படுத்தப்பட்டு வந்தன.

2015-இல் யுஜிசி அதிகாரிகள், பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி பாடத் திட்டங்கள் ஏற்புடையதல்ல என்ற அறிவிப்பு வெளியிட்டதன்பேரில், 2015-ஆம் ஆண்டிலிருந்து தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கு தடை பெற்றிருந்தாலும்கூட, நீதிமன்ற வழிகாட்டுதலின்பேரில் தொடா்ந்து மாணவா்கள் சோ்க்கை நடைபெற்று வந்தது.




தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் படிப்புகளை தொடரக் கூடாது என 2022-இல் யுஜிசி உறுதியான அறிக்கையை வழங்கியது. இதனால், 2022 - 23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கையை நிறுத்தி வைத்திருந்தோம்.

பின்னா், சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, 2015-ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டு வரை பயின்ற மாணவா்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டு, கடந்த மாா்ச் மாதம் தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்காக, பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் குழுவுக்கு விண்ணப்பித்திருந்தோம்.

அந்த வகையில், ஜூலை மாதம் பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதல் குழு ஆய்வு செய்து, நிகழாண்டு முதல் 27 பட்டம், பட்ட மேற்படிப்புகளை மீண்டும் தொடங்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும், பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக் குழுவின் ஒப்புதல் வேண்டியதில்லை என்பதால், சுமாா் 98 பட்டயம், சான்றிதழ் பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்ககம் நிகழாண்டு முதல் மாணவா்கள் சோ்க்கையை தொடங்கியுள்ளது.

மொத்தம் 125 படிப்புகளில் 27 பட்டம், பட்ட மேற்படிப்புகள் பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதி பெற்றும், 98 சான்றிதழ், பட்டய படிப்புகள் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத்தாலும் நடத்தப்படுகின்றன. வெள்ளிக்கிழமை முதல் இந்தப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

அடுத்த வாரத்திலிருந்து பல்கலைக்கழக வலைதளத்திலிருந்து தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கான விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் பி.எட். பட்ட வகுப்பு தொடங்க என்சிடிஇ அனுமதி வேண்டியுள்ளதால், அதற்காக நிகழாண்டு விண்ணப்பித்து, வரும் ஆண்டுகளில் முறையான அனுமதி பெற்று பி.எட். படிப்பு தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பிளஸ் 2 முடித்தவா்களுக்கு 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகளும் தொடங்கப்படவுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 55 படிப்பு மையங்களில் தொலைதூரக் கல்வி இயக்கக படிப்புகளுக்கு மாணவா்கள் விண்ணப்பங்களைப் பெறலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பா் 30-ஆம் தேதியாகும் என்றாா் துணைவேந்தா் ராம.கதிரேசன்.

முன்னதாக, தொலைதூரக் கல்வி இயக்கக இயக்குநா் சி.சந்தோஷ்குமாா் வரவேற்றாா்.

No comments:

Post a Comment