நாடு முழுதும், எம்.பி.பி.எஸ்., மாணவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, மருத்துவ மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பட்டப்படிப்பு காலத்தில், ஊரக பகுதிகளில் உள்ள ஐந்து குடும்பங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தொடர் மருத்துவ கண்காணிப்பை வழங்க வேண்டும். அதற்கான வழிகாட்டுதல்களையும், ஒத்துழைப்பையும் மருத்துவ கல்லுாரி முதல்வர்கள், துறைசார் தலைவர்கள், மருத்துவ பேராசிரியர்கள் வழங்க வேண்டும்.
புதிய பாடத்திட்டத்தின்கீழ், எம்.பி.பி.எஸ்., பயிலும் மாணவர்கள், ஐந்தரை ஆண்டுகளில், சம்பந்தப்பட்ட குடும்பங்களை, 26 முறை சந்தித்து, அவர்களது உடல்நலன் தொடர்பான ஆய்வுகளையும், சிகிச்சைகளையும் முன்னெடுக்க வேண்டும். இப்பயிற்சியில் மொத்தம், 78 மணி நேரம் ஈடுபட வேண்டும்.
அத்துடன், ஊட்டச்சத்து குறைபாடு, நோய் தொற்று பாதிப்பு, காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம்கள் நடத்துவதும், தேவைப்பட்டால் மருத்துவமனைகளில் அனுமதித்து, சிகிச்சை வழங்குவதும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக சேர்க்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, சில வாரங்களுக்கு முன், அறிவிப்பு வெளியிடப்பட்டு, கல்வியாளர்களின் எதிர்ப்பு காரணமாக திரும்ப பெறப்பட்டது. ஆனால், பொதுமக்களின் கருத்தறியப்பட்டு, சில திருத்தங்களுடன் புதிய பாடத்திட்டம், வழிகாட்டுதல்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
No comments:
Post a Comment