Thursday, August 10, 2023

அரசு பள்ளிகளின் கல்வி தரம் உயர்ந்துள்ளது - மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


அரசுப் பள்ளிகளில் படித்து முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை 225 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதை அறியலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழக அரசுப் பள்ளிகளில் படித்து ஐஐடி, நிஃப்ட் போன்ற நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கான பாராட்டு விழா சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நேற்றுநடைபெற்றது. இதில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டு, முன்னணி கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 225 மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், மடிக்கணினி வழங்கி பாராட்டினார்.

விழாவில் அவர் பேசியதாவது: பள்ளிக்கல்வி துறை வரலாற்றில் இது முக்கியமான நாள். ஒருகாலத்தில் கல்வி நமக்கு எட்டாக்கனியாக இருந்தது. இன்று அனைவரும் படிக்கிறோம் என்றால், நமது முன்னோர்கள் கொண்டுவந்த சீர்திருத்த செயல்பாடுகள் அதற்கு காரணம். அதேபோல, நான் முதல்வன், புதுமைப்பெண் போன்ற பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த, பல்வேறு முன்னெடுப்புகளை பள்ளிக்கல்வி துறை மேற்கொண்டது. அதன் பலனாக, தற்போது 225 மாணவர்கள் நாட்டின்முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கைக்கு தகுதி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 75 ஆக இருந்தது. இதன்மூலம் அரசுப் பள்ளிகளின் கல்வித்தரம் உயர்ந்திருப்பதை அறியலாம். இவ்வாறு உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் நுழையும்போதுதான் சமூகநீதி முழுமை பெறுகிறது.

கல்விச் செலவை அரசே ஏற்கும்: மாவட்டம்தோறும் இயங்கிவரும் மாதிரி பள்ளிகளின் சிறந்த செயல்பாட்டின் விளைவால் இத்தனை மாணவர்கள் முதன்மை கல்வி நிறுவனங்களுக்கு தேர்வாகியுள்ளனர். இவர்களது கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்றுள்ளது. அரசு ஏற்படுத்தி தரும் வாய்ப்புகளை பயன்படுத்தி, மாணவர்கள் கவனச் சிதறல் இல்லாமல் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு முதல்வர் பேசினார்.

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி பேசும்போது, “சென்னை ஐஐடியில் 492 அரசுப் பள்ளி மாணவர்கள் பி.எஸ். தரவு அறிவியல் பயின்று வருகின்றனர். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 1,000 ஆக உயரும். தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ்அடிப்படை பயிற்சி இம்மாதம் தொடங்கப்படும். இந்த வாய்ப்புகளை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

தைவான் நாட்டின் குன்ஷான் பல்கலைக்கழகத்தில் பி.இ. படிக்கதேர்வாகியுள்ள தருமபுரி அரசுப்பள்ளி மாணவி ஜெயஸ்ரீ பேசும்போது, “கிருஷ்ணகிரி மாவட்டம் பண்ணந்தூர் எனும் குக்கிராமத்தில் பிறந்த நான், கடல் கடந்து வெளிநாடு சென்று கல்வி பயில வாய்ப்பு கிடைத்துள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றதேஇதற்கு காரணம். பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி, என்னை போன்ற எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் தமிழக அரசுக்கு நன்றி” என்றார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, அன்பில் மகேஸ், பள்ளிக்கல்வி செயலர் காகர்லா உஷா, இல்லம் தேடி கல்விதிட்ட சிறப்பு பணி அலுவலர் இளம்பகவத், தமிழக மாதிரி பள்ளிகள் உறுப்பினர் செயலர் இரா.சுதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாதிரி பள்ளிகள் அதிகரிக்கப்படும்: பின்னர், செய்தியாளர்களிடம் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியபோது, “முன்னணி உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர்கள் சேர்வதுஅத்தி பூத்ததுபோல இருந்த நிலை மாறி, தற்போது 225 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். தொடர்ந்து மாதிரிபள்ளிகள் மூலம் சிறப்பு பயிற்சிஅளித்து, அனைத்து மாணவர்களையும் நல்ல நிலைக்கு கொண்டு செல்வதே எங்கள் இலக்கு. வரும்காலங்களில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மாதிரி பள்ளிகள் அதிகரிக்கப்படும்.

பழங்குடி மாணவர்களுக்கும் தனி கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கான கட்டமைப்பு மேம்பாடு திட்டம் குறித்து பொதுப்பணி துறையுடன் ஆலோசனை நடத்தப்படும். புதுச்சேரி போல அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கைக்கான இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது குறித்து முதல்வர்தான் முடிவெடுக்க வேண் டும்” என்றார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News