
அரசு பள்ளிகளில், 14,000 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில், உரிய கொள்கை முடிவு எடுக்காததால், பணி நியமனம் தாமதமாகிறது.
தமிழக அரசு பள்ளிகளில், ஒன்று முதல், 5ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் பதவியில், 4,989; 10ம் வகுப்பு வரை பாடம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர் பதவியில், 5,154 மற்றும் பிளஸ் 2 வரை பாடம் நடத்தும், 3,876 முதுநிலை ஆசிரியர் என, 14,019 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்த காலியிடங்களில், ஒரு பகுதியை மட்டும் நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், ஆண்டு தேர்வு திட்ட அறிக்கை, கடந்த ஆண்டு வெளியிடப்பட்டது. இதன்படி, 10,000 இடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, மே, ஜூன் மற்றும் நவம்பர் உள்ளிட்ட மாதங்களில் தேர்வு நடத்த உத்தேசிக்கப்பட்டது.
ஆனால், தேர்வுகளை நடத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி முதன்மை செயலர் காகர்லா உஷா, ஆசிரியர் தேர்வு வாரிய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மற்றும் அதிகாரிகள் குழுவினர், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வி வட்டாரங்களில் கிடைத்த தகவல்கள்: தமிழக அரசின் ஆசிரியர் தகுதி தேர்வு முடித்தவர்கள், 80,000க்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காக காத்திருக்கின்றனர். 2013ல் தகுதி தேர்வு முடித்தவர்களில், 16,000 பேர் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து, வேலை கிடைக்காத நிலையில் உள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு மட்டுமின்றி, இன்னொரு போட்டி தேர்வு எழுத, தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்துள்ளது. இந்த தேர்வை எழுத பெரும்பாலானோர், ஆர்வம் காட்டவில்லை.
இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென, பட்டதாரிகள் தரப்பில் பல கட்ட போராட்டங்கள் நடந்துள்ளன. அடுத்த ஆண்டு துவக்கத்தில் லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், பட்டதாரிகளின் அதிருப்தியால் தேர்தலில், ஆளும் கட்சிக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என, கருதப்படுகிறது. அதனால், போட்டி தேர்வு நடத்த முடியாமல், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பணி நியமனம் செய்ய முடியாமல், குழப்பம் நீடிக்கிறது. இதனால், பணி நியமனம் தாமதமாகிறது.
No comments:
Post a Comment