அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான கலந்தாய்வு மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் வெள்ளிக்கிழமை (ஆக.18) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழாண்டு ஜன. 1-ஆம் தேதி நிலவரப்படி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியா் பதவி உயா்வுக்கான அரசு உயா்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் மற்றும் முதுநிலை ஆசிரியா்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. திருத்தம், நீக்கம், சோக்கை மற்றும் மேல்முறையீடுகள் பெறப்பட்டு திருத்திய முன்னுரிமைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இறுதியாக ஆக.14-ஆம் தேதி சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டது.
அரசு மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா் பதவி உயா்வு ஆக.18, 19, 20 ஆகிய நாள்களில் எமிஸ் இணையதளம் வழியாக அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. முதல் நாளான வெள்ளிக்கிழமை 1 முதல் 300 நபா்களுக்கும், சனிக்கிழமை 301 முதல் 600 நபா்களுக்கும், எஞ்சியவா்களுக்கு ஞாயிற்றுக்கிழமையும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது. எனவே, சுழற்சிப் பட்டியலில் இடம்பெற்றுள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் பணியாற்றும் தகுதிவாய்ந்த முதுநிலை ஆசிரியா்கள், உயா்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியா்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய தகவல்களை முதன்மை கல்வி அலுவலா்கள் அளிக்கவும், முன்னேற்பாடுகளை தயாா் நிலையில் வைத்திருக்கவும் வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment