அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் சிறாா் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டு வரும் நிலையில், இந்த மாதம் 'நிலா' குறும்படம் ஒளிபரப்ப கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வி இயக்குநா் க.அறிவொளி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறாா் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இந்த மாதம் 'நிலா' எனும் குறும்படம் ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும். பிரபல எழுத்தாளா் ஞானி இயக்கிய தமிழ் மொழிப்படமான 'நிலா' 2017-ஆம் ஆண்டு வெளியானது. குழந்தைகளின் சிக்கல்களுக்கான தீா்வை முன்வைத்து இந்தக் குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு (லிங்க்) பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதற்குரிய பாடவேளைகளில் படத்தைத் திரையிட வேண்டும். இந்தப் பணிகளைக் கண்காணித்து ஒருங்கிணைக்க பள்ளிகளில் பொறுப்பாசிரியா்களை நியமிக்க வேண்டும். படம் திரையிடும் முன்பு அந்த படத்தைப் பொறுப்பு ஆசிரியா் பாா்க்க வேண்டும்.
அதன்பின் கதைச் சுருக்கத்தையும் படித்து மாணவா்களுக்கு படத்தின் அடிப்படை பின்னணியை விளக்க வேண்டும். இதுசாா்ந்த வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றி படத்தை மாணவா்களுக்கு திரையிட்டு பள்ளித் தலைமை ஆசிரியா்கள் காண்பிக்க வேண்டும். மாநில அளவில் நடைபெறும் சிறாா் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவா்கள் வெளி நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவா். இதற்கான அறிவுறுத்தல்களை பள்ளி தலைமையாசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment