Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 8, 2023

பேறுகால விடுமுறை ( Maternity Leave ) நாட்களை பணிக்காலமாக கருத முடியுமா?' - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதும்படி உத்தரவிட, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பணியாற்றிய நாகஜோதி என்பவர், சென்னை மாவட்டத்துக்கு, 2018 ஆகஸ்ட்டில் இடமாற்றம் செய்யப்பட்டார்; 2019 ஜனவரியில் துணை தாசில்தாராக பதவி உயர்வு பெற்றார். இரண்டு ஆண்டு பயிற்சி காலத்தின்போது, 2020 மார்ச் முதல் டிசம்பர் 1 வரை, 9 மாதங்கள் பேறுகால விடுமுறை எடுத்தார்.

இந்த விடுமுறை காலத்தை பணிக் காலமாக கருதாததால், தன்னை விட இளையவர்கள், தாசில்தாராக பதவி உயர்வு பெற்று விட்டதாகவும், எனவே, பேறுகால விடுமுறையை பணிக் காலமாக கருதி, தாசில்தாராக பதவி உயர்வு வழங்க கோரியும், உயர் நீதிமன்றத்தில், நாகஜோதி வழக்கு தொடர்ந்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.டி.பெருமாள், ''முழு சம்பளத்துடன், பேறுகால விடுமுறை எடுக்க உரிமை உள்ளபோது, அந்த விடுமுறை நாட்களை பணிக் காலமாகதான் கருத வேண்டும்.

''கேரளாவில் உள்ள பணி விதிகளின்படி, பயிற்சி காலத்தின்போது பேறுகால விடுமுறை எடுத்தால், பணி காலமாக கருதப்படும். அந்த விதி, தமிழகத்தில் இல்லை என்றாலும், மகளிருக்கு அந்த சலுகையை வழங்க வேண்டும்,'' என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் எம்.அழகு கவுதம், ''விடுமுறை நாட்களை, முழு பணிக் காலமாக கருத முடியாது,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:

வருவாய் பணி விதிகளின்படி, இரண்டு ஆண்டுகள் பயிற்சி காலத்தை முடிக்க வேண்டும். அதனால், பயிற்சி காலத்துக்கு முழு விலக்கு கோர முடியாது. பயிற்சி காலத்தின் போது, பல தேர்வுக்கு உட்பட வேண்டும்.

பயிற்சி காலத்தை பூர்த்தி செய்யும்பட்சத்தில், நிரந்தர பணியில் வரன்முறை செய்யப்படுவர். எனவே, பயிற்சி காலத்தை வெறும் சம்பிரதாயமாக கருத முடியாது.

பேறுகால விடுமுறையை, பயிற்சி காலத்தின்போது எடுத்திருந்து, அந்த நாட்களை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், பயிற்சி காலத்தை நீட்டிக்க, நிர்வாகத்துக்கு உரிமை உள்ளது. விதிகளில் எந்த திருத்தங்களையும் கொண்டு வருவது, அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது.

அதற்காக, அரசுக்கு நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. பேறுகால விடுமுறையை, பணிக் காலமாக கருதும்படி உத்தரவு பிறப்பிக்க முடியாது. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News