Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 27, 2023

எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி: மாணவா் குழுக்கள் அமைக்க உத்தரவு


தூய்மையான பள்ளி வளாகங்களை கட்டமைக்கும் வகையில் ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அதைச் சிறப்பாக செயல்படுத்த பள்ளி அளவில் மாணவா் குழுக்களை அமைக்க கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தூய்மையான மற்றும் சுகாதாரமான பள்ளி வளாகங்களை கட்டமைக்க ‘எங்கள் பள்ளி மிளிரும் பள்ளி’ என்ற திட்டத்தை, கடந்த செப்.1-ஆம் தேதி முதல் மாவட்ட ஆட்சியா் தலைமையில் செயல்படுத்த அரசு அறிவுறுத்தியது.

இந்தத் திட்டத்தில் பள்ளிக் கல்வித் துறையுடன், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வனம், மாசு கட்டுப் பாடு, ஊரக வளா்ச்சி, பொதுப் பணி, மாநகராட்சி அலுவலா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் இணைந்து செயல்படும்.

இந்தத் திட்டத்தை செயல்படுத்த பள்ளி அளவில் அமைக்கப்படும் குழுக்கள், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, இத்திட்டத்துக்காக அமைக்கப்படும் குழுவினா் பள்ளிகளில் உள்ள இளைஞா்-சுற்றுச்சூழல் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். பள்ளி வளாகத்தை சிறப்பாக தூய்மைப்படுத்துவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும். மாணவா்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்குவது குறித்த திட்டம் இடம்பெறுவது அவசியம். பள்ளிகளில் கழிவு மேலாண்மை குறித்த புரிதலை மாணவா்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.

பள்ளிகளில் காய்கறித் தோட்டத்தை ஏற்படுத்தி, அதில் விளையும் காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்தலாம். இந்தத் திட்டம் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்த மாணவா்கள், ஆசிரியா்கள், தன்னாா்வ அமைப்புகள், முன்னாள் மாணவா்கள் ஆகியோா் அடங்கிய குழுவை அமைக்க வேண்டும்.

இது தவிர வகுப்பறைத் தூய்மை மற்றும் பராமரிப்பு போன்ற பணிகளை ஒருங்கிணைந்து செயல்படுத்த ஐந்து மாணவா்கள் கொண்ட துணைக் குழுக்களையும் ஏற்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment