Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 26, 2024

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் நியமனம் எப்படி? பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நியமனம் செய்வதற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன், தமிழக பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளில் உள்ள அனைத்து பாட பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்படுபவர்களை நேரடி பணி நியமனம் செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் பின்பற்ற வேண்டிய கால அட்டவணையை அரசாணையாக வெளியிட்டிருக்கிறார்.


தமிழக அரசின் இந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியர் உபரி பணியிடங்களை மே மாதம் 1-ந்தேதிக்குள் கண்டறிந்து கணக்கீடு செய்ய வேண்டும். அவ்வாறு கண்டறியப்பட்ட உபரி ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு மே மாதம் 31-ந்தேதிக்குள் பணி நிரவல் செய்ய வேண்டும்.

அதே போல் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வை ஜூன் மாதம் 30-ந்தேதிக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதனை தொடர்ந்து வரும் ஜூலை 1-ம் தேதிக்குள் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை மதிப்பீடு செய்து, அந்த பணியிடங்களை நிரப்பிட கோரும் கருத்துருக்களை ஜூலை 15-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வாறு அனுப்பப்படும் கருத்துருக்கள் மீது செப்டம்பர் 30-ந்தேதிக்குள் அரசாணை வெளியிடப்படுவதோடு, பணிநியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்து ஆசிரியர் தேர்வு வாரியக்குழு மற்றும் அதன் நிதித்துறை உறுப்பினரின் ஒப்புதலை உறுதி செய்து அக்டோபர் 31-ம் தேதிக்குள் அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

வெளியிடப்படும் காலிப் பணியிடங்கள் குறித்த அறிவிப்புகளுக்கு ஜனவரி 31-ம் தேதிக்குள் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வை நடத்தி, தேர்வு முடிவுகளை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் வெளியிட்டு, மே மாதம் 1-ந்தேதியில் இருந்து மே 31-ம் தேதிக்குள் சான்றிதழ் சரிபார்ப்பு, தேர்வு செய்யப்பட்ட தேர்வர்களின் இறுதி பட்டியல் ஆகியவற்றை வழங்க வேண்டும் என கால அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வி இயக்குனர், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் தவறாமல் கடைப்பிடிக்கவேண்டும் " இவ்வாறு அந்த அரசாணையில் பள்ளிக்கல்வித் துறை செயலாளர் குமரகுருபரன் குறிப்பிட்டிருக்கிறார்.

No comments:

Post a Comment