Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, January 31, 2024

அரசு ஊழியர் குடும்ப ஓய்வூதியம் ``பெண்கள் தங்கள் பிள்ளைகளை வாரிசாக நியமிக்கலாம்" - மத்திய அரசு!

பெண்களில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள் இறந்தால் அவர்களின் கணவருக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.

சம்பந்தப்பட்ட பெண் ஊழியரின் கணவர் இறந்த பிறகு, அல்லது அவருக்குத் தகுதியில்லாமல் போகும்பட்சத்தில்தான் அப்பெண்ணின் வாரிசுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்கும்.

சில பெண்கள், தங்களது மறைவுக்குப் பிறகு தங்களது ஓய்வூதியம் தங்கள் பிள்ளைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால், இதற்கு சட்டத்தில் இடம் இல்லாமல் இருந்தது.

இந்நிலையில், சமீபத்தில் மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் ஓய்வூதிய சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருந்தது. அதன்படி, பெண்களைப் பொறுத்தவரையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது இறப்புக்குப் பிறகு குடும்ப ஓய்வூதியத்துக்கு கணவருக்கு பதிலாக தங்களின் வாரிசை நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வந்தது.

அந்த சட்ட திருத்தத்திற்கு தற்போது மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து இருக்கிறது. இது தொடர்பாக மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பேட்டியில்,

``திருமணக் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து நடவடிக்கைகள், அல்லது குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம், வரதட்சணை தடைச் சட்டம் போன்ற சட்டங்களின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வழக்குகளை எதிர்கொண்டு வரும் பெண்களுக்கு, புதிய ஓய்வூதிய சட்ட திருத்தம் ஆதரவாக அமையும்.

பெண்களில், அரசு ஊழியர்கள் அல்லது ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது குடும்ப ஓய்வூதியத்திற்கு தங்களின் மகன் அல்லது மகளை வாரிசாக நியமிக்க முடியும். பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற சூழலை உருவாக்குவதற்காக பிரதமரின் தலைமையின் கீழ் தொடர்ச்சியான நிர்வாக சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன'' என்று அவர் கூறினார்.

பணியாளர் நலத்துறை அமைச்சகம் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பெண்களுக்கு சம உரிமை கிடைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைக்கு இணங்க அரசின் நீண்ட கால சட்டத்தில் திருத்தம் செய்து, பெண் ஊழியர்கள் தங்களது குடும்ப ஓய்வூதியத்திற்கு தங்களின் மகன் அல்லது மகளை பரிந்துரைக்க வகை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, பெண் அரசு ஊழியர் இறந்தால் அவரின் கணவரே குடும்ப ஓய்வூதியம் பெறத் தகுதியானவராக இருந்தார்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்கள் இதற்காக தாங்கள் பணியாற்றும் துறை தலைமையிடம் முறைப்படி கடிதம் கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்களுக்குப் பிள்ளை இல்லாதபட்சத்தில் அவர்களின் கணவருக்குக் குடும்ப ஓய்வூதியம் சென்றடையும். ஒருவேளை அவரின் பிள்ளைகள் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊழியரின் கணவர் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு இருந்தால், அப்பெண்ணின் கணவருக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment