Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, February 16, 2024

'அரசு ஊழியர்களின் கோரிக்கை..!' - கொடுத்த வாக்குறுதியை நிதி நிலைமையைச் சொல்லி கைவிரிப்பது சரியா?!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

விகடன் செய்தி

தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் கே.கணேசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தவில்லை. இதை உடனடியாக அமலுக்கு கொண்டுவர வேண்டும். நிதிப் பற்றாக்குறையால் நிறுத்தப்பட்ட விடுப்பு சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். நிலுவைத் தொகை, இடைநிலை, முதுகலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டைக் களைதல், காலி பணியிடங்களை நிரப்புதல், சத்துணவு, அங்கன்வாடி, துப்புரவுப் பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல் உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே வரும் 15-ம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் செய்கிறோம். மேலும் அரசு காலம் தாழ்த்தும் பட்சத்தில் 26-ம்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம்" என்றார்.

இதுகுறித்து தமிழக நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "பல்வேறு வகைகளிலும் அரசு அலுவலர்களின் நலனுக்காகப் பல முன்னெடுப்புகளைத் தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அவர்களுடைய வேறு பல கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுமென்ற எண்ணம் இருந்தாலும், தொடர்ச்சியாக தமிழ்நாடு சந்தித்த இரண்டு மாபெரும் இயற்கைப் பேரிடர்கள், அதற்காக மேற்கொள்ளப்பட்ட முன்னெடுப்புகள், அந்தப் பேரிடர் மற்றும் வெள்ள நிவாரண பணிகளுக்கான எதிர்பாராத பெரும் செலவினங்கள், மேலும் இவற்றுக்கு மத்திய அரசிடமிருந்து நிதி ஏதும் பெறப்படாத நிலையில், அதனை மாநில அரசே மேற்கொள்ளவேண்டிய சூழ்நிலை உள்ளது.

இவற்றின் காரணமாகவும், சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டுக்கான மாநில அரசுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை ஆண்டுக்கு ரூபாய் 20,000 கோடி நிறுத்தம் போன்றவற்றின் காரணமாக மாநிலத்தின் நிதிப் பற்றாக்குறை சற்று அதிகமாகியுள்ளது. எனினும் அரசு வருவாயைப் பெருக்கி நிதி நிலைமையை சீர்செய்து உயர்த்திடத் தேவையான நடவடிக்கைகளை முனைப்புடன் மேற்கொண்டு வருகிறோம். விரைவில் நிதி நிலைமை சீரடைந்தவுடன் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிதி நிலைமைக்கு ஏற்ப அரசு பரிவுடன் பரிசீலிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இந்தச் சூழ்நிலையில், அரசு அலுவலர்கள், ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ள வேலை நிறுத்த அறிவிப்பினை கைவிட்டு அரசுக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்து இருக்கிறார்.

தமிழக நிதி நிலைமையைச் சொல்லி ‘கைவிரிப்பது’ சரியா? என்ற கேள்வியுடன் பா.ஜ.க துணை தலைவர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். "தி.மு.கவின் மூன்று ஆண்டுகால ஆட்சியில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. தொடக்க பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை காலில் போட்டு மிதித்து விட்டார்கள். போக்குவரத்து தொழிலார்களை ஏமாற்றவிட்டார்கள். மதுரை காமராஜர் பல்கலை ஆசிரியர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக ஊதியம் கொடுக்கவில்லை. தேர்தல் நேரத்தில் பொய் வாக்குறுதியாக பழைய ஓய்வூதியம் திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி ஏமாற்றவிட்டது. இதுபோல் தி.மு.க அனைத்து துறைகளை சேர்ந்த தொழிலார்களிடம் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக பொய்களை சொல்லி நாடகம் நடத்தி வருகிறது" என்றார்.

இதற்கிடையில் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பரசு மற்றும் அதன் நிர்வாகிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் 14.2.2024 அன்று சந்தித்து பேசினர். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தினர், 'எங்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும்' என ஸ்டாலின் உறுதி அளித்திருக்கிறார். இதையடுத்து போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்கிறோம்' என்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News