Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 18, 2024

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஹால் டிக்கெட்; தேதி மாற்றி அறிவித்த தேர்வுகள் துறை


பத்தாம்‌ வகுப்பு பொதுத் தேர்வுகளை 2023- 24ஆம் கல்வி ஆண்டில் எழுதும் பள்ளி மாணவர்களுக்கான ஹால் டிக்கெட்டை (தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு) மார்ச் 20 முதல் பதிவிறக்கம்‌ செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

முன்னதாக மார்ச் 15 தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தேதி மாற்றப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களைப் பெறுவது எப்படி?

மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்ய வேண்டும். பள்ளிகள்‌ தங்களது யூசர் ஐடி மற்றும்‌ PASSWORD ஆகியவற்றைப் பயன்படுத்தி பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

பெயர்ப் பட்டியலில்‌ திருத்தம் செய்ய இன்றே கடைசி

மேலும்‌, மார்ச்‌/ ஏப்ரல்‌ 2024 பத்தாம்‌ வகுப்பு பொதுத் தேர்விற்கான பெயர்ப் பட்டியலில்‌ பள்ளி மாணவ / மாணவிகளின்‌ பெயர்‌, பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள்‌ ஏதுமிருப்பின்‌ திருத்தம் செய்ய இன்றே கடைசித் தேதி ஆகும். சம்பந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்ப் பட்டியலில்‌ உரிய திருத்தங்கள்‌ மேற்கொள்ளும்படி, சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்‌ / முதல்வர்களிடம்‌ அறிவுறுத்த வேண்டும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அனைத்து மாவட்டக்‌ கல்வி அலுவலர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னதாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித் தேர்வர்கள் பிப்ரவரி 24 முதல் ஹால் டிக்கெட் எனப்படும் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுகளை பதிவிறக்கம் செய்தனர். இதற்கிடையில், மாணவர்கள் மார்ச் 15 முதல் ஹால் டிக்கெட்டைப் பெறலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து இருந்தது. பிறகு மார்ச் 20ஆம் தேதிக்கு மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு தேதிகள் இவைதான்!

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 23 அன்று செய்முறைத் தேர்வுகள் தொடங்கின. இவர்களுக்கு 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற்றன. இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

குறிப்பாக மார்ச் 26ஆம் தேதி தமிழ் மற்றும் இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 28ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத் தேர்வு நடைபெற உள்ளது.


ஏப்ரல் 1ஆம் தேதி கணிதப் பாடத்துக்கான பொதுத் தேர்வு தொடங்குகிறது. ஏப்ரல் 4ஆம் தேதி அறிவியல் பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 6ஆம் தேதி விருப்ப மொழி பாடத் தேர்வு நடைபெற உள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி அன்று கடைசியாக சமூக அறிவியல் பாடத்துக்கான தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது.

கூடுதல் தகவல்களுக்கு: https://www.dge.tn.gov.in/

No comments:

Post a Comment