Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 4, 2024

‘ சரண்டர் ’ செய்யப்படும் 8,130 பணியிடங்கள் ஆண்டுக்கு ரூ .300 கோடி சேமிக்க அரசு திட்டம்

தமிழகத்தில் உள்ள, 490 பேரூராட்சிகளில், 8,130 பணியிடங்கள் 'சரண்டர்' செய்யப்படுவதால், ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் சேமிக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை வெளியிட்ட அரசாணை:

பேரூராட்சிகளில், துாய்மைப்பணி தனியார் நிறுவனங்களுக்கு, 3 ஆண்டு 'டெண்டர்' அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது. தெருவிளக்கு பொருத்துவது, குடிநீர் வினியோகிப்பது, திடக்கழிவு மேலாண்மை பணி மேற்கொள்வது போன்ற பணிகள், 'அவுட்சோர்ஸிங்' முறையில் மேற்கொள்ளப்படுகிறது.

பேரூராட்சிகளில் தெருவிளக்கு போடுதல் மற்றும் தண்ணீர் திறந்து விடும் பணி மேற்கொள்ளும் எலக்ட்ரீஷியன், பிட்டர், அலுவலக வாட்ச்மேன், டிரைவர், பிளம்பர், மீட்டர் ரீடர், குடிநீர் குழாய் பராமரிப்பாளர், தெருவிளக்கு பராமரிப்பு உதவியாளர் உள்ளிட்ட, 8,130 பணியிடங்கள் உள்ளன.

இதில், 7,061 பணியிடங்கள் நிரம்பியுள்ளன; 1,069 காலிப்பணியிடங்கள் உள்ளன. இந்த, 8,130 பணியிடங்களையும் ரத்து செய்து, 'அவுட்சோர்ஸிங்' முறையில் இப்பணிகளை மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 7,061 நிரந்தர பணியாளர்களின் பணி ஓய்வுக்கு பின், அப்பணியிடங்கள் நிரப்பப்படமாட்டாது; காலியாக உள்ள, 1,069 பணியிடங்களும் நிரப்பப்படமாட்டாது. இப்பணியிடங்கள் 'சரண்டர்' செய்யப்படுவதன் வாயிலாக, ஆண்டுக்கு, 300 கோடி ரூபாய் சேமிக்கப்படும்.

இவ்வாறு, அதில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

பேரூராட்சி ஊழியர் சங்கத்தினர் சிலர் கூறியதாவது:

பேரூராட்சிகளில் துாய்மை பணியாளர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில், துாய்மைப்பணி மேற்பார்வையிட, 59 துப்புரவு அலுவலர் பணியிடம், 114 துப்புரவு ஆய்வாளர் பணியிடம், 190 உதவி துப்புரவு ஆய்வாளர் பணி, 200 துப்புரவு மேற்பார்வையாளர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட உள்ளன.

துாய்மைப்பணி, அவுட்சோர்ஸிங் முறையில் தனியாருக்கு கான்ட்ராக்ட் வழங்கப்படும் நிலையில், அவர்கள் குப்பை சேகரிக்கும் அளவுக்கேற்ப ஆண்டுக்கு ஒரு கணிசமான தொகையை, பேரூராட்சி நிர்வாகங்கள் வழங்க வேண்டும்.

கான்ட்ராக்ட் நிறுவனத்தினரே துாய்மைப்பணியை மேற்பார்வை செய்து கொள்வர்; இந்நிலையில், அவர்களை மேற்பார்வை செய்ய புதிய பணியிடங்களை உருவாக்குவது வியப்பளிக்கிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர்கள் சங்க சி.ஐ.டி.யு., மாநில பொருளாளர் ரங்கராஜ் கூறுகையில், ''பேரூராட்சிகளில் நிரந்தர துாய்மைப் பணியாளர்களாக இருந்தவர்கள், குறைந்தபட்சம், 20,000 முதல், 40,000 ரூபாய் வரை கவுரவமான சம்பளம் பெற்று வந்தனர்; கவுரமான வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

''பணி ஓய்வின்போது, பணப்பலன்களும் வழங்கப்பட்டன. அப்பணியிடங்கள் சரண்டர் செய்யப்படுவதால், அவுட்சோர்ஸிங் முறையில் தான் இனி, துாய்மைப்பணியாளர்கள் பணிபுரிய முடியும்; அதிகபட்சம், 20,000 ரூபாய் சம்பளம் பெறுவதே கடினம். இதனால், அவர்களின் வாழ்க்கைத்தரம் மேம்படாது,'' என்றார்.

No comments:

Post a Comment