தமிழகத்தில் மாணவர்களின் பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கியுள்ளதால் லோக்சபா தேர்தல் பயிற்சி வகுப்புகளை ஞாயிறு அன்று நடத்துவதை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது.
சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் கூறியதாவது:
தற்போது பிளஸ் 2, பிளஸ் 1 பொதுத் தேர்வுகள் முடிவுறும் நிலையில் உள்ளது. அடுத்து பத்தாம் வகுப்பு தேர்வு துவங்கவுள்ளது. மேல்நிலை பொதுத் தேர்வு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகள் துவங்கியுள்ளது. இப்பணிகள் ஞாயிறு தவிர அனைத்து நாட்களும் நடக்கின்றன.
இப்பணிகளை மிக கவனத்துடன் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதேநேரம் லோக்சபா தேர்தலையொட்டி ஆசிரியர்களுக்கான தேர்தல் பயிற்சி வகுப்புகள் வழக்கமாக சனி, ஞாயிறு நடக்கும்.வாரத்தில் 6 நாட்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு, ஞாயிறு அன்று தேர்தல் பயிற்சி வகுப்பிலும் பங்கேற்கும் சூழல் ஏற்பட்டால் உடல், மனம் ரீதியாக ஆசிரியர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். இதனால் தேர்தல் பயிற்சி வகுப்புகளை ஞாயிறு அன்று நடத்துவதை தவிர்க்க வேண்டும்.
தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதி செய்துதர வேண்டும். முதுகலை ஆசிரியர்களை பி1, பி2, பி3 நிலைகளில் பணிகள் ஒதுக்காமல், தலைமை தேர்தல் அலுவலராக மட்டும் பணி ஒதுக்க தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment