Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 20, 2024

குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூட மாட்டோம் இயக்குனர் விளக்கம் !!!

மாணவர்கள் எண்ணிக்கை குறைவான பள்ளிகளை, தற்போது மூடும் திட்டம் இல்லை' என, பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது. மாவட்ட அதிகாரிகள் அதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுதும், அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, குறைவாக மாணவர்கள் உள்ள பள்ளிகளை மூட, பள்ளிக்கல்வி துறை திட்டமிட்டிருந்தது.

மாவட்ட வாரியாக இதற்கான பட்டியல் சேகரிக்கப்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதற்கட்டமாக, 32 பள்ளிகளை மூடி விட்டு, அங்கு படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள வேறு பள்ளிகளில் சேர்க்க முடிவானது.

இதுகுறித்து நேற்று விரிவான செய்தி வெளியானது. இந்நிலையில், பள்ளிகளை மூடும் முடிவை பள்ளிக்கல்வித்துறை கைவிட்டுஉள்ளது.

இதுதொடர்பாக, தொடக்க கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்த ஆண்டு மார்ச் 1ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை துவக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், நேற்று வரை, 2.19 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். ஒன்றாம் வகுப்பில் மட்டும், 1.88 லட்சம் பேர் சேர்ந்துஉள்ளனர்.

இதுமட்டுமின்றி, அரசு பள்ளிகளில் உள்கட்டமைப்பை மேம்படுத்த, வரும் கல்வி ஆண்டில், 20,000 தொடக்க பள்ளிகளில் திறன் வகுப்பறைகளும், 8,000 அரசு நடுநிலை பள்ளிகளில் ஹைடெக் ஆய்வகங்களும் துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும், 80,000 ஆசிரியர்களுக்கு நவீன வழியில் பாடம் நடத்த, 'டேப்' என்ற கையடக்க கணினி வழங்கப்பட உள்ளது.

மேலும், அரசு பள்ளி மாணவர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், சில மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை குறைவான, அரசு தொடக்க, நடுநிலை பள்ளிகளை மூட, மாவட்ட கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்துஉள்ளதாக, தகவல்கள் வந்துள்ளன.

தற்போதைய நிலையில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகளை மூடும் திட்டம் ஏதும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கையுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News