Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, May 7, 2024

தமிழகத்தில் 1.3 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர்: ஜூன் 14-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியீடு

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் சுமார் 1.3 லட்சம் மாணவர்கள் எழுதினர். வினாத்தாளில் இயற்பியல் கேள்விகள் கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 14-ம் தேதி வெளியாகிறது.

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (நீட்-NEET) மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ நர்சிங் கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, வரும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 557 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேலான தேர்வு மையங்களில் நேற்று மதியம் 2 முதல் 5.20 மணி வரை நடைபெற்றது. இத்தேர்வை தமிழகத்தில் சென்னை, மதுரை உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 200 தேர்வு மையங்களில் 1.3 லட்சம் வரையிலான மாணவர்கள் எழுதினர்.

தேர்வு எழுத வந்த மாணவர்களை 12.30 மணிக்கு பின்னர் பலத்த சோதனைகளுக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர ஆதார் அட்டை, புகைப்படம், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றை மட்டும் கொண்டு செல்ல அனுமதி வழங்கப்பட்டது. எனினும், தோடு, கொலுசு, நகைகள், காப்பு, செல்போன் உட்பட தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதற்கிடையே மாணவர்கள் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டுமென என்டிஏ கூறியிருந்தது. அதன்படி 1.30 மணிக்கு பிறகு தேர்வு எழுத வந்தவர்கள் தேர்வு கூடத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. மேலும், மாணவ, மாணவிகளுடன் வந்த பெற்றோர் நுழைவு வாயிலிலேயே நிறுத்தப்பட்டு காக்க வைக்கப்பட்டனர். மேலும், தேர்வு அறையிலும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மாணவர்கள் முறைகேடுகளில் ஏதேனும் ஈடுபடுகிறார்களா என்பது குறித்தும் கண்காணிக்கப்பட்டது.

No comments:

Post a Comment