Join THAMIZHKADAL WhatsApp Groups
பொதுமக்கள், பெருநிறுவனங்கள், தன்னார்வ அமைப்பினர் மற்றும் முன்னாள் மாணவர்கள் உதவியுடன், அரசு பள்ளிகளை மேம்படுத்தும் வகையில், 'நம்ம ஊரு; நம்ம பள்ளி' திட்டத்துக்கு முன்னுதாரணமாக, 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாறியிருக்கிறது.
திருப்பூர், 15 வேலம்பாளையம் பகுதியில் செயல்படும் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், 1,300 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பொதுமக்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோரை உறுப்பினர்களாக கொண்ட, அறிவுத்திருகோவில் அக்ஷயா டிரஸ்ட், இப்பள்ளி மேம்பாட்டில் துவக்கம் முதலே ஆர்வம் காட்டி வருகிறது.
தற்போது, பள்ளியில் உள்ள, 8 வகுப்பறைகளையும் 'ஸ்மார்ட் கிளாஸ்' ஆக மாற்றியுள்ளனர்.பள்ளி கட்டடம் முழுக்க வர்ணம் பூசப்பட்டு, ஆங்காங்கே தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வாசகங்கள் பளிச்சிடுகின்றன.
நீலம், மஞ்சள், ஊதா என, ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஒவ்வொரு வர்ணம் பூசப்பட்டு, அந்த வகுப்பு சார்ந்த பாடம் தொடர்பான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கின்றன. அந்நிறம் கொண்ட மலரின் பெயர், அந்த வகுப்பறைக்கு சூட்டப்பட்டிருக்கிறது.
வகுப்பறைக்கு வெளியே காலனி 'செல்ப்' துவங்கி, மாணவர் அமரும் இருக்கை, மேஜை, கதவு, ஜன்னல்களில் மாட்டப்பட்டுள்ள திரை சீலை, மின்விசிறி, புத்தகங்கள் வைக்கும் அலமாரி என, அனைத்தும் அதே நிறத்தில் இருப்பது, கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு வகுப்பறையிலும் 'மெகா சைஸ்' தொடுதிரை பொருத்தப்பட்டு, 'இன்டர்நெட்' உதவியுடன் பாடங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வகுப்பறைக்கும், ஏசி., பொறுத்தப்பட்டிருப்பது 'ைஹலைட்'. யு.பி.எஸ்., வசதியும் உண்டு.
கற்றல் எளிதானது...
எங்கள் பள்ளி ஆசிரியர்கள், 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகின்றனர்; ஒருமித்த கருத்துடன் செயல்படுகின்றனர். அக்ஷயா டிரஸ்ட் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள், பி.டி.ஏ., பள்ளி மேலாண்மைக் குழுவினர், ஊர் மக்கள் என அனைவரும் பள்ளி வளர்ச்சிக்கு பல்வேறு வகையில் ஒத்துழைக்கின்றனர். தற்போது, அக்ஷயா டிரஸ்ட் நிர்வாகிகள், 65 லட்சம் ரூபாய் செலவில், 8 வகுப்பறைகளை நவீனமயமாக்கி உள்ளனர். இதன் வாயிலாக, மாணவர்களின் கற்கும் ஆவல் அதிகரிக்கிறது.
- ராதாமணி
தலைமையாசிரியை
கூடுதல் ஆசிரியர் தேவை!
பெற்றோர் சிலர் கூறுகையில்,'பள்ளி கட்டமைப்பு சிறப்புற செய்யப்பட்டிருக்கிறது. மாணவர்கள் மகிழ்ச்சியான சூழலில் கல்வி கற்கின்றனர். 6 முதல், 8ம் வகுப்பு வரை, 550க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 10 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், கூடுதலாக, 5 ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையை கல்வித்துறை மேற்கொண்டால், பள்ளி வளர்ச்சிக்கு அது கூடுதல் உதவியாக இருக்கும்,' என்றனர்
8th class social lesson plan english medium
ReplyDeletehttps://tamilmoozi.blogspot.com/2024/07/8th-class-social-science-lesson-plans.html