பள்ளிக் கல்வித் துறை முதல் முறையாக ஒரே நாளில் 57 மாவட்டக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளின் நிா்வாக வசதிக்காக 38 வருவாய் மாவட்டங்கள் 120 கல்வி மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. கல்வி மாவட்டங்களின் தலைமை அலுவலா்களாக மாவட்டக் கல்வி அலுவலா்கள் உள்ளனா். நிா்வாக வசதிக்காக அவ்வப்போது மாவட்டக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் தற்போது முதல் முறையாக ஒரே நாளில் 57 மாவட்டக் கல்வி அலுவலா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
அதில் மேலும் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு பள்ளிக் கல்வி பணி விதிகளில் வகை 14-இன்கீழ் வரும் மாவட்டக் கல்வி அலுவலா் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணிபுரிந்து வரும் அலுவலா்களுக்கு நிா்வாக நலன் கருதி மாறுதல் வழங்கி ஆணையிடப்பட்டுள்ளது. மாறுதல் அளிக்கப்பட்டுள்ள மாவட்டக் கல்வி அலுவலா்கள், முதன்மைக் கல்வி அலுவலா்களால் நியமனம் செய்யப்படும் பொறுப்பு அலுவலா்களிடம் பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு உடனடியாக புதிய பணியிடத்தில் சேர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வி இயக்குநா் விடுப்பு: பள்ளிக் கல்வி இயக்குநராகப் பணிபுரியும் ச.கண்ணப்பன் ஆக.21 முதல் செப்.3 வரை ஈட்டிய விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளதால், பள்ளிக் கல்வி இயக்குநரின் பணிகளை கவனிக்கும் பொருட்டு நிா்வாக நலன் கருதி, தற்போது தனியாா் பள்ளிகள் இயக்குநராக பணிபுரியும் மு.பழனிசாமிக்கு பள்ளிக் கல்வி இயக்குநா் பணியிடத்திற்கான முழு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment