பொதுவாக இன்று நம் குழந்தைகள் இனிப்பு சுவையை அதிகம் விரும்புகின்றனர். அறுசுவையில் கசப்பு என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரிதாக விரும்புவது இல்லை.
ஆனால் நம் உணவில் கசப்பை சேர்த்து கொள்வது முக்கியம். அதனால் தான் நம் முன்னோர்கள் பாகற்காய், அதலக்காய், சுண்டக்காய் போன்ற கசப்பான காய்களை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தனர். இன்றைய தலைமுறை குழந்தைகளுக்கு சுண்டைக்காய் போன்ற உணவுகளை சாப்பிட பழக்க வேண்டியது கட்டாயம். காரணம் அவர்கள் சாக்லேட் போன்ற இனிப்பான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் வயிற்றில் அதிகரிக்கும் புழு போன்ற தொல்லைகளை தீர்க்க கசகசப்பான காய்களை எடுத்துக்கொள்வது நல்லது. அப்படி ஒரு கசப்பான காய்களில் முக்கியமானது சுண்டைக்காய். குழந்தைகள் சுண்டக்காய் குழம்பு என்றாலே அலறியடித்து ஓடுகின்றனரா.. இந்த மாதிரி சுண்டைக்காயில் கெட்டியாக சட்னி செய்து கொடுங்கள். ருசி அருமையாக இருக்கும். சூடான சாதம், இட்லி, ஊத்தாப்பத்திற்கு இந்த சட்னி சரியான காமினேஷன்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு கூட்டிக்கொண்டே இருந்தால் சுண்டக்காயை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் சர்க்கரை அளவு கட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது.
சுண்டைக்காய் சட்னி செய்ய தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் - 1/4 கிலோ
சின்ன வெங்காயம் - 1/4 கிலோ
தேங்காய் - அரைமுடி
வரமிளகாய் - 10
பூண்டு - 10 பல்
உப்பு - தேவையான அளவு
புளி - நெல்லிக்காய் அளவு
கறிவேப்பிலை - 5 கொத்து
கடுகு 1/4 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கடலெண்ணெய் - 6 ஸ்பூன்
சுண்டைக்காய் சட்னி செய்முறை
கால் கிலோ அளவு சுண்டைக்காயை நன்றாக உப்பு போட்டு கழுவி எடுக்க வேண்டும்.
பின்னர் சுண்டைக்காயை லேசாக தட்டி அதில் உள்ள விதைகளை கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கி 4 ஸ்பூன் கடலெண்ணெய் விட்டு சுண்டைக்காயை நன்றாக வதக்க வேண்டும். சுண்டக்காய் வதங்கிய பின் அதை ஒரு தட்டில் கொட்டி ஆற விட வேண்டும்.
பின்னர் கடாயில் மேலும் கொஞ்சம் எண்ணெய் விட்டு ஒரு ஸ்பூன் உளுந்தம்பருப்பு ஒரு ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சீரகத்தையும் சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும். பருப்பு சிவந்து வரும் போது அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
தோல் நீக்கிய பூண்டையும் சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் தேங்காய் நன்றாக வதங்கிய பின் அதில் 5 கொத்து கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். கடைசியாக வர மிளகாயை காம்பு நீக்கி சேர்த்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு புளியை சேர்த்து கொள்ள வேண்டும். இப்போது வதக்கிய பொருட்களை நன்றாக ஆற விட வேண்டும்.
பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தால் ருசியான சுண்டைக்காய் சட்னி ரெடி
ஒரு தாளிப்பு கரண்டியை சூடாக்கி இரண்டு ஸ்பூன் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்ததால் அதன் ருசி இன்னும் அதிகமாக இருக்கும்.
குறிப்பு : இந்த சட்னியை அம்மியில் அரைத்தால் அதன் சுவை அருமையாக இருக்கும். சட்னியை கொஞ்சம் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment