சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம் என்று சொல்லப்படும் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டமானது, பெண் குழந்தைகளுக்கான சேமிப்பு திட்டமாகும். அதிக வட்டி வழங்கப்படும் திட்டம் என்பதால், வாடிக்கையாளர்களின் ஆதரவை இந்த திட்டம் தொடர்ந்து பெற்று வருகிறது. வெறும் ரூ.250 அல்லது நீங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, செல்வமகள் கணக்கை ஆரம்பிக்கலாம். இந்த திட்டத்தில், மாதா மாதம் பணம் செலுத்த வேண்டும் என்ற கட்டாயமில்லை.
ஒரு வருடத்துக்கு மொத்தமாகவும் செலுத்தலாம். அதிகபட்சமாக ஒரு வருடத்தில் ரூ. 1.5 லட்சம் வரை செலுத்தலாம். சேமிப்புக் கணக்கிற்கு முதிர்வு என்பது, கணக்கு தொடங்கப்பட்ட அன்றிலிருந்து 21 வருடங்களில் முடிவு பெறும். கணக்கு தொடங்கியதிலிருந்து 15 வருடங்கள் வரை மட்டும்தான் சேமிப்பு தொகையை நீங்கள் செலுத்த முடியும். பெண் குழந்தை 18 வயதை எட்டும்போது அவர்களுடைய கல்வி செலவுக்கு இந்த முதலீட்டிலிருந்து பாதி தொகையை எடுத்துக்கொள்ளலாம்.
2வது பெண் குழந்தைக்கு 10 வயது நிரம்பியிருக்கக்கூடாது. அதாவது, குழந்தை பிறந்து 10 ஆண்டுகள் வரை இந்த திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம். ஒரு குடும்பத்தில் அதிகபட்சம் 2 பெண் குழந்தைகளை மட்டுமே இணைக்க முடியும். ஒருவேளை இரட்டை குழந்தைகள் அல்லது ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள் என்றால், அவர்களுக்கென்றே விதி விலக்கு உண்டு. பெண் குழந்தையின் பெற்றோர் மட்டுமல்லாமல், சட்டபூர்வமான பாதுகாவலர் குழந்தையின் சார்பாகவும் கணக்கில் சேரலாம்.
இந்த திட்டத்தின்கீழ் குறைந்தபட்ச முதலீட்டு தொகை ரூ.250. அதாவது கணக்கை செயலில் வைத்திருக்க ஒரு நிதியாண்டில் ரூ.250 முதலீடு செய்ய வேண்டும். ஒவ்வொரு நிதியாண்டிலும் இந்த அளவிற்கு திட்டத்தில் முதலீடு செய்யாவிட்டால், கணக்கு மூடப்படும். கணக்கை மறுபடியும் செயல்படுத்த வேண்டுமானால், கணக்கு வைத்திருப்பவர்கள் ஆண்டுக்கு ரூ.50 அபராதம் செலுத்த வேண்டும். போஸ்ட் ஆபீஸ்களில் செல்வமகள் திட்ட கணக்கினை தொடங்கலாம். அல்லது பொதுத்துறை அல்லது தனியார் துறை வங்கிகள் மூலம் தொடங்கலாம். அல்லது ஆன்லைன் மூலமாகவும் ஆக்டிவேட் செய்ய முடியும்.
இதுதவிர பொதுத்துறை வங்கிகளான SBI போன்ற வங்கிகளின் வெப்சைட்களிலும் டவுன்லோடு செய்து கொள்ளலாம். தனியார் வங்கிகளான ICICI BANK, AXIS BANK, HDFC BANK போன்ற வெப்சைட்களில் இருந்தும் பெறலாம். தற்போது, செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின்கீழ் 2 விதமான அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. அதன்படி, மார்ச் 31, 2024 வரை கணக்கு வைத்திருப்பவர் குறைந்தபட்ச அளவிலான முதலீட்டை வருடந்தோறும் செய்து, இந்த சேமிப்பு திட்டத்தின் இருப்பை வைத்திருக்க வேண்டுமாம்.
இல்லாவிட்டால், உங்களது கணக்கு செயலிழந்து போகலாம். அப்படி செயலிழந்து போய்விட்டால், மறுபடியும் கணக்கை தொடங்க, அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்நிலையில், சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில், பல விதிகளை மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பொருளாதார அமைச்சகத்தால் புதிய வழிகாட்டுதல்களும் கொண்டுவரப்பட்டுள்ளன.
நிதி அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்களின்படி, பெண் குழந்தையின் தாத்தா அல்லது பாட்டி தனது பேத்திக்காக செல்வ மகள் கணக்கைத் திறந்திருந்தால், அந்த கணக்குகள் பேத்தியின் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் பெயருக்கு மாற்ற வேண்டும். ஒருவேளை ஒரே விவரங்களுடன் 2 கணக்குகள் தொடங்கப்பட்டால், அது உடனடியாக மூடப்படும். மகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் பான் கார்டு, ஆதார் இணைப்பது கட்டாயமாகும்.
அவர்கள் அவ்வாறு இணைக்காவிட்டால், அவர்களின் பான் மற்றும் ஆதார் எண்களை உடனடியாக எந்த தாமதமுமின்றி சேகரித்து கணக்கு விவரங்களில் இணைக்க தபால் அலுவலகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டுதல்கள் குறித்து அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரிவிக்க தபால் நிலையங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment