Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, November 15, 2024

66,000 மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கடிதம்!!ஏன் தெரியுமா?

திருநெல்வேலி மாவட்டத்தில் குழந்தைகள் தினத்தையொட்டி அனைத்து வகைப் பள்ளிகளிலும் 10,11,12-ம் வகுப்பு பயிலும் 66 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் நேரடி கடிதம் எழுதியுள்ளார். இந்த 2 பக்க கடிதம் அந்தந்த மாணவ, மாணவியரிடம் பள்ளிகளில் நேரடியாக வழங்கப்பட்டது.

கடிதத்தில் முதன்மை கல்வி அலுவலர் கூறியிருப்பதாவது: “நீங்கள் அனைவரும் மிகவும் திறமை வாய்ந்தவர்கள். உங்கள் திறமையை வெளிக்கொணரவே இங்கு பல்வேறு வாய்ப்புகளும், மேடைகளும் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. வாசிப்பில், விளையாட்டில், மன்ற செயல்பாடுகளில், சாரண இயக்கங்களில், பசுமைப் படையில், நாட்டு நலப்பணித் திட்டத்தில், கலைத் திருவிழாவில் என்று பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. உங்களை நிரூபிக்க வேண்டிய களம் இவைதானே அன்றி, வெட்டி பந்தாக்களும், வசனங்களும், வன்முறைகளும் அல்ல. வாழ்வுக்கு ஒருபோதும் இவை உதவாது என்பதை உணருங்கள்.

பள்ளிக்கூடங்கள் என்பது உங்களுக்கு பாடம் கற்றுக்கொடுத்து தேர்வில் வெற்றி பெறவைக்கும் இடம் மட்டுமல்ல. உங்களின் தனித்திறன்களை வளர்ப்பதற்கு களம் அமைக்கும் இடமும்கூட. உங்களை வளப்படுத்துவதற்கும், வழி மாட்டுவதற்கும் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் “அன்பாடும் முன்றில் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து துறை அலுவலர்களும் உங்கள் நலன் கருதியே ஒவ்வொரு நிமிடமும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

சக மாணவர்களிடமும், உங்கள் ஆசிரியர்களிடமும் அன்பை விதையுங்கள். நாம் எதை விதைக்கிறோமோ, அதையே அறுவடை செய்யமுடியும். அன்பும், சமாதானமும் ஒருபோதும் உங்களை ஏமாற்றாது. உங்களுக்கு துணைபுரியவும். வழிநடத்தவும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களையும், வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றங்களையும் உங்கள் ஆசிரியர்களிடமும், பெற்றோர்களிடமும் மனம் விட்டு பேசி தீர்வு காணுங்கள்.

பெற்றோர்களை அவ்வப்போது பள்ளிக்கு அழைத்து வாருங்கள். ஆசிரியர்களை சந்திக்க செய்யுங்கள். உங்கள் ஆசிரியர்கள், பெற்றோர்கள். நீங்கள் என மூவரும் இணைந்து செயல்பட்டால் எளிதாக உங்களது இலக்கை அடைந்துவிடலாம். முதிர்ச்சியற்ற ஈர்ப்பு, போதை என அற்ப இன்பங்களுக்காக அழகான உங்கள் வாழ்கையை அழித்துக் கொள்ளாதீர்கள். தவறான பாதைகள் செல்வதற்கு எளிதாக இருக்கலாம். ஆனால், அது உங்களின் வாழ்க்கையை சீரழிந்து தலைகுனிவை ஏற்படுத்திவிடும் என்பதே உண்மை.

தவறாக வழி காட்டுபவர்கள் மற்றும் தவறான நபர்களிடமிருந்து தள்ளி இருங்கள். எந்நேரமும் சுறுசுறுப்பாய் இருங்கள். புன்னகையுடன் உலா வாருங்கள். திட்டமிட்டு செயல்படுங்கள், நிறைய கற்றுக்கொள்ளுங்கள், நன்கு விளையாடுங்கள். பொதுத்தேர்வை எதிர்நோக்கியிருக்கும் மாணவர்களே, தேர்வை துணிவுடனும், நேர்மறை எண்ணங்களுடனும் எதிர்கொள்ளுங்கள். ஆசிரியர்கள் காட்டும் வழியை முறையாக பின்பற்றுங்கள். உங்களால் முடியாத காரியங்களை ஆசிரியர்களிடமும், பெற்றோரிடமும் தெரிவித்து தீர்வு காணுங்கள்.

உங்கள் நலனை உங்களைவிட அதிகம் பேணுபவர்கள் உங்கள் பெற்றோர்களே. பெற்றோர்களுக்குத் தெரியாமல் நீங்கள் செய்யும் காரியங்கள் நிச்சயம் உங்களுக்கு ஆபத்தை மட்டுமே விளைவிக்கும். நீங்கள் இப்போது எதைத் தொலைத்திருந்தாலும், கவலை கொள்ளாதீர்கள். இன்று தொடங்கினால் கூட இன்னும் எவ்வளவோ உயரங்களை அடைந்துவிடலாம். உங்கள் உயர்விற்காகவே அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. நம்பிக்கையுடன் கைகோருங்கள், தொடர்ந்து பயணிப்போம். நீங்கள் அனைவரும் ஆண்டுப் பொதுத் தேர்விலும், உங்கள் வாழ்விலும் வெற்றிபெற அன்பு வாழ்த்துகள்” என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News