Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 11, 2024

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாவட்டக் கல்வி அலுவலருக்கு அனுமதி

பள்ளிக்கு சரியாக வராமல் வேறொரு ஆசிரியர் மூலம் பாடம் நடத்தும் விவகாரங்களில் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்று தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் நிலை, கட்டமைப்பு வசதிகள், நலத்திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியிருந்தார். அதன்படி மாநிலம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு செய்துவருகின்றனர்.

அப்போது கற்பித்தல் பணிகளில் சுணக்கம் காட்டிய ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும், முறையாக ஆய்வு செய்யாத அலுவலர்களின் விவரத்தையும் பொதுவெளியில் வெளியிட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அந்த வகையில் தர்மபுரி அரூர் கல்வி மாவட்டத்துக்குட்பட்ட ராமியாம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியர் கே.பாலாஜி பணிக்கு வராமல், மாற்று நபரை வகுப்பு எடுக்க அனுப்பியது ஆய்வில் தெரியவந்தது.

இதையடுத்து ஆசிரியர் பாலாஜி மீது 17-வது விதியின் கீழ் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதற்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியை நாகலட்சுமி, வேறு பள்ளிக்கு இடமாறுதல் செய்யப்பட்டார். இந்த சம்பவம் பள்ளிக்கல்வித் துறை வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல், மாநிலம் முழுவதும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணிக்கு முறையாக வருவதில்லை எனவும் தொடர் புகார்கள் வந்தன.

இதையடுத்து பள்ளிக்கு சரியாக வராத ஆசிரியர்களை கண்டறிந்து ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தொடக்கக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் பூ.ஆ.நரேஷ், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை காக்க வேண்டியது நமது பொறுப்பாகும். அதன்படி பள்ளியில் ஆய்வு செய்யும் போது ஆசிரியர்கள் பணிக்கு வராமல் வேறுநபர் மூலம் பாடம் நடத்துவது கண்டறியப்பட்டால் அல்லது இதுசார்ந்த புகார்கள் பெறப்பட்டால் அதன் மீது தனிக் கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும்.

அந்த விசாரணையில் உண்மை இருப்பின் மாவட்டக் கல்வி அலுவலரே ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளலாம். மேலும், பள்ளியில் இத்தகைய தவறுகள் நடைபெறும் போது அதன் விவரத்தை உயர் அதிகாரிகளுக்கு வழங்க தவறும்பட்சத்தில் தலைமையாசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மீதும் துறைசார்ந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News