Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 2, 2025

10, 11, 12 பொதுத்தேர்வுகள்: - உதவி எண்கள் அறிவிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பான புகார்கள், ஐயங்களை தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான மார்ச்/ஏப்ரல் - 2025 பொதுத் தேர்வுகள் மேல்நிலை இரண்டாம் ஆண்டிற்கு 03.03.2025 முதல் 25.03.2025 வரையும், மேல்நிலை முதலாமாண்டிற்கு 05.03.2025 முதல் 27.03.2025 வரையும், பத்தாம் வகுப்பிற்கு 28.03.2025 முதல் 15.04.2025 வரையும் நடைபெறவுள்ளது.

பொதுத்தேர்வுகளைச் சிறப்பாக நடத்திட கண்காணிப்பு அலுவலர்கள் , ஆய்வு அலுவலர்கள் மற்றும் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர்களுக்கான மாநில அளவில் கூட்டம் 13.02.2025 அன்று நடத்தப்பட்டு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்வுகளைக் கண்காணிப்பதற்காக கண்காணிப்பு அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மாவட்டத்திற்குச் சென்று தேர்விற்கு முந்தைய ஏற்பாடுகள் அனைத்தையும் பார்வையிட்டு உறுதி செய்துள்ளனர்.

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்டத் தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தி அக்கூட்டத்தில்

1. தடையில்லா மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறைக்கும்

2. தேர்வுப்பணிகளுக்கு பாதுகாப்பு வழங்கிட காவற்றுறைக்கும்

3. தேர்வுமையங்களில் போதுமான அடிப்படை வசதிகள் செய்து தர உள்ளாட்சி அமைப்புகளுக்கு முன்னேற்பாடுகள் குறித்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேல்நிலை இரண்டாம் ஆண்டுப் பொதுத்தேர்வினை 8,21,057 தேர்வர்களும், மேல்நிலை முதலாம் ஆண்டுப் பொதுத்தேர்வினை 8,23,261 தேர்வர்களும் மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வினை 9,13,036 தேர்வர்களும் தேர்வெழுதவுள்ளனர்.

மேனிலை இரண்டாமாண்டிற்கு 3,316 தேர்வு மையங்களிலும் மேனிலை முதலாமாண்டிற்கு 3,316 தேர்வு மையங்களிலும் பத்தாம் வகுப்பிற்கு 4,113 தேர்வு மையங்களிலுமாக மொத்தம் 25,57,354 தேர்வர்கள் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வினை எழுதவுள்ளனர்.

இத்தேர்வுப் பணியில் ஒவ்வொரு தேர்வு நாளன்றும் சுமார் 45,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேலும் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க சுமார் 4800 க்கும் மேற்பட்ட பறக்கும் படையினர் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

மேனிலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் 20,476 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு மொழிப்பாட விலக்கு, சொல்வதை எழுதுபவர், தேர்வெழுத கூடுதல் ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாணவர்கள்/ தேர்வர்கள்/ பொதுமக்கள் தங்களது புகார்கள், கருத்துக்கள் மற்றும் ஐயங்களை தெரிவித்து பயன்பெற வசதியாக அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு நாட்களில் ஒவ்வொரு நாளும் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை இக்கட்டுப்பாட்டு அறை செயல்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்வுக் கட்டுப்பாட்டு அறை – தொடர்பு எண்கள்

9498383075 / 9498383076

அலைபேசி தடை:-

தேர்வு மைய வளாகத்திற்குள் அலைபேசியை எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் தேர்வறையில் தங்களுடன் அலைபேசியை வைத்திருப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ அலைபேசி/இதரத் தகவல் தொடர்பு சாதனங்களை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News