Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, June 5, 2025

மாணவர்களுக்கு 11 கட்டுப்பாடுகள் விதித்து முதன்மை கல்வி அலுவலர் அதிரடி உத்தரவு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
சாதி அடையாளங்களுடன் மாணவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது என்று திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளுக்கு மாணவர்கள் எவ்வாறு வரவேண்டும், என்னென்ன விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது குறித்து, முதன்மை கல்வி அலுவலர் மு.சிவகுமார் சுற்றறிக்கை ஒன்றை பள்ளிகளுக்கு அனுப்பியுள்ளார். அதன் விவரம்: மாணவர்கள் அனைவரும் அரசால் தெரிவிக்கப்பட்ட சீருடையையே அணிந்து வர வேண்டும்.

மாணவர்கள் முக்கால் அளவுள்ள மற்றும் இறுக்கமான கால்சட்டையை அணிந்து வரக்கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வரவேண்டும். சட்டை மிகவும் இறுக்கமாக இருக்க கூடாது. கைப்பகுதி முழங்கை அளவுக்கு சற்றுமேல் இருக்குமாறு அமைய வேண்டும். தலைமுடியை ஸ்மார்ட் கட்டிங் செய்து வரவேண்டும். அதிக முடி வைக்க கூடாது.

கலர் கலரான பொட்டு வைத்து வருவது, வண்ணக் கயிறுகளை கையில் கட்டுவது, கழுத்தில் அணிவது கூடாது. சாதி அடையாளங்களை குறிக்கும் வகையில் பனியன் அணிந்து வருவதையும், சைக்கிள்களில் சாதி அடையாளங்களுடன் ஸ்டிக்கர் ஒட்டி வருவதையும் தவிர்க்க வேண்டும். மாணவிகள் நிறைய பொட்டு வைப்பதையும், கலர் ரிப்பன் கட்டி வருவதையும் தவிர்க்க வேண்டும்.

அரிவாள், கத்தி கூர்மையான பொருட்கள், சைக்கிள் செயின் போன்றவற்றை மாணவர்கள் கொண்டு வருகிறார்களா என்பதை கண்டறிய, தினமும் பள்ளி நுழைவாயிலில் மாணவர்களின் புத்தகப் பையை ஆசிரியர்கள் சோதனை செய்ய வேண்டும். நல்ல தூய்மையான காலணிகளை பயன்படுத்த வேண்டும். தன் சுத்தம் பேணுமாறு தினமும் வழிபாட்டுக் கூட்டத்தில் கூற வேண்டும். அவற்றை மாணவர்கள் கடைபிடிக்கிறார்களா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். நாப்கின் மற்றும் கழிவறையை பயன்படுத்தும் முறை, கைகளை சுத்தம் செய்வது பற்றி மாணவர்களுக்கு ஆசிரியர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களிடையே மோதல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பெற்றோருக்கான அறிவிப்பு: ஒவ்வொரு தேர்வுக்குப் பிறகும் ஆசிரியர்களை சந்தித்து, மாணவர்களின் முன்னேற்றம் மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து பெற்றோர்கள் கேட்டறிய வேண்டும். தினமும் மாணவர்கள் பள்ளிக்கு செல்வதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். மாணவர்களுக்கு விடுப்பு தேவை எனில், வகுப்பாசிரியருக்கு பெற்றோர் தகவல் தெரிவித்து விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும்.

தகவலின்றி மாணவர் பள்ளிக்கு விடுப்பு எடுத்தால், மறுநாள் பெற்றோர் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரிடம் உரிய காரணம் தெரிவிக்க வேண்டும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கவும், அவர்களின் எதிர்காலம் சிறப்பாக அமையவும் பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News