Join THAMIZHKADAL WhatsApp Groups

கர்நாடகாவில், சட்ட கல்விக்கு மவுசு அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில், 32 சட்ட கல்லுாரிகள் துவங்கப்பட்டுள்ளன.
இதற்கு முன் சட்ட கல்விக்கு, அவ்வளவாக டிமாண்ட் இருந்தது இல்லை. வேறு கோர்ஸ்களில் சீட் கிடைக்கா விட்டால், கடைசியாக சட்ட படிப்பை மாணவர்கள் தேர்வு செய்து கொள்வர். ஆனால் இப்போது, காலம் மாறியள்ளது. சட்டம் பயில மாணவ - மாணவியர் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
சட்ட படிப்பில் தற்போது மாற்றம் வந்துள்ளது. மூன்று ஆண்டு கோர்சுடன், ஐந்தாண்டு கோர்ஸ் அறிமுகப்படுத்திய பின், சட்டக்கல்விக்கு மவுசு அதிகரித்துள்ளது. இரண்டாம் ஆண்டு பி.யு.சி., முடித்த பலரும், சட்ட கல்லுாரிகளில் சேர்கின்றனர்.
அரசு துறைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், உள்ளாட்சிகள், தனியார் மற்றும் அரசு சார்ந்த வங்கிகள், தனியார் நிறுவனங்கள் உட்பட, பல நிறுவனங்கள் சட்ட ஆலோசகர்களை நியமிக்கின்றனர். இதனால் வக்கீல்களுக்கு தேவை அதிகரிக்கிறது. இதன் பயனாக சட்டக்கல்லுாரி மற்றும் சட்ட பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்கிறது.
மாணவர் சேர்க்கை அதிகரித்ததால், கர்நாடகாவில் சட்ட கல்லூரிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. முந்தைய இரண்டு கல்வி ஆண்டுகளில், புதிதாக 32 கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. இதில் பெங்களூரில் மட்டுமே, 14 கல்லுாரிகள் செயல்படுகின்றன.
விஜயபுரா, மூடபிதரேவில் தலா இரண்டு, ஹூப்பள்ளி, கொப்பால், திப்துார், கோலார், கங்காவதி, இலகல், மைசூரு, ராணிபென்னுார், தாளிகோட்டே, சாம்ராஜ்நகர், கதக், மாஸ்தியில் தலா ஒரு கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளன. இவற்றில் சில கல்லுாரிகளில் மூன்றாண்டு கோர்ஸ்களும், சில கல்லுாரிகள் ஐந்தாண்டு கோர்ஸ்களும் துவக்கி உள்ளன.
இது தொடர்பாக, மூத்த வக்கீல்கள் சிலர் கூறியதாவது:
சமீப ஆண்டுகளாக சட்டம் படிக்க மாணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே மாநிலத்தில் புதிதாக சட்ட கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. முந்தைய இரண்டு ஆண்டுகளில், 32 கல்லுாரிகள் திறக்கப்பட்டன. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.
புதிதாக சட்ட கல்லுாரி துவக்க, மூன்று கட்டங்களில் அனுமதி பெறுவது அவசியம். பல்கலைக்கழக குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று, கல்வி நிறுவனம் குறித்து தகவல் சேகரிக்க வேண்டும். கல்லுாரி கட்டும் இடங்களை ஆய்வு செய்து, முதற்கட்ட அனுமதி அளிப்பர்.
அதன் பின் கல்லுாரி துவங்க, அனுமதி அளித்து சிபாரிசு செய்து அரசுக்கு அனுப்பப்படும். அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து ஒப்புதல் அளிக்கும். புதிய கல்லுாரி துவங்க, சட்ட பல்கலைக்கழகம் மற்றும் மாநில அரசை விட, பார் கவுன்சில் ஆப் இந்தியா வின் ஒப்புதலும், இதன் விதிமுறைகளை பின்பற்றுவதும் மிகவும் முக்கியம். அதன் பின்னரே புதிய கல்லுாரி துவக்க, அனுமதி கிடைக்கும்.
No comments:
Post a Comment