Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 17, 2025

தமிழகத்தில் 76,181 பேர் தகுதி பெற்று இருந்தாலும் நீட் தேர்ச்சி பெற்ற 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்பு: அமைச்சர் தகவல்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
நீட் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கும் திட்டத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை தேனாம்பேட்டயில் நேற்று தொடங்கி வைத்தார். நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்று இருந்தாலும் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளதாக அப்போது அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்வின்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் 4-வது ஆண்டாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 1 லட்சத்து 35,715 பேரில் 76,181 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெறாத மாணவர்கள் 59,534 பேருக்கு முதல்கட்டமாக 80 மனநல ஆலோசகர்களை கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

முதல் நாளில் 600 மாணவ, மாணவிகளை தொடர்பு கொண்டு மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தனிமையை தவிர்த்து கொள்ள வேண்டும், மற்றவர்களிடம் இருந்து விலகி இருப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். தூக்கமின்மை, பசியின்மை, தற்கொலை முயற்சி, தற்கொலை எண்ணம், தொடர்ந்து அழுது கொண்டிருப்பது, அதிகமாக கோபம் கொண்டு அருகில் இருப்பவர்களிடம் பேசுவது, பயத்தோடு, பதற்றத்தோடு இருக்கும் மாணவர்களை நிதானப்படுத்துவதோடு, அவர்களுக்கான மன அமைதியை ஏற்படுத்துகின்ற வகையில் இந்தப் பயிற்சி பயன்படும்.

தமிழகத்தில் உள்ள 75 அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான வாய்ப்பு 11,850 இடங்கள் மட்டுமே உள்ளன. நீட் தேர்வில் 76,181 பேர் தேர்ச்சி பெற்று இருந்தாலும் இளங்கலை மருத்துவப் படிப்புகளில் 11,850 பேருக்கு மட்டுமே வாய்ப்புள்ளது. எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து, பல் மருத்துவம், நர்சிங், பாரா மெடிக்கல் என்று ஏறத்தாழ 20,000-க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இவற்றில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளன. சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி போன்ற படிப்புகளையும் படிக்கலாம்.

நீட் தேர்வு இல்லாமலேயே நேரடியாக 12-ம் வகுப்பு மதிப்பெண்களை வைத்து சேரக்கூடிய கால்நடை மருத்துவம், யோகா போன்ற பட்டப்படிப்புகள் உள்ளன. எனவே, மாணவர்களின் மனநலனை திடப்படுத்திடும் வகையில் அடுத்தடுத்து இருக்கும் வாய்ப்புகள், அவர்களுக்கு அறிவித்திடும் வகையிலும் ஒரு முயற்சியாக மனநல ஆலோசனை பயிற்சி தொடங்கப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின்போது எழிலன் நாகநாதன் எம்எல்ஏ, சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வுக் குழும இயக்குநர் அருண்தம்புராஜ், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் வினித், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் இராஜமூர்த்தி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News