Join THAMIZHKADAL WhatsApp Groups
நீட் தேர்வில் மதிப்பெண்களை மாற்றியமைப்பதாகக் கூறி, மாணவர்கள் மற்றும் பெற்றோரை ஏமாற்றி, லட்சக்கணக்கில் பணம் பறித்த மஹாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு இடைத்தரகர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. நாடு முழுதும், 22 லட்சத்துக்கும் அதிகமானோர் நீட் தேர்வு எழுதியதில், 12.36 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். நீட் தேர்வை வைத்து ஏராளமான பண மோசடிகளும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், மஹாராஷ்டிராவின் சோலாப்பூர் மற்றும் நவி மும்பையைச் சேர்ந்த சந்தீப் ஷா, சலீம் படேல் ஆகிய இடைத்தரகர்கள், சில மாணவர்களின் பெற்றோரிடம் பணம் பறித்ததாக புகார் அளிக்கப்பட்டது.
சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை நடத்தியபோது, சந்தீப் ஷா, சலீம் படேல் இருவரும் நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையில் உள்ள அதிகாரிகளுடன் தொடர்பு இருப்பதாக கூறி நம்ப வைத்துள்ளனர்.
ரகசிய சந்திப்பு
மும்பையின் பரேல் பகுதியில் பிரபல நட்சத்திர ஹோட்டலில், பெற்றோருடன் ரகசிய சந்திப்புகளை நடத்தியுள்ளனர்.
அப்போது நீட் தேர்வு மதிப்பெண்களை மாற்றி அமைக்க முடியும் என, மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோரிடம் போலி வாக்குறுதி அளித்துள்ளனர். திருத்தப்பட்ட மதிப்பெண்கள், அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஆறு மணி நேரத்திற்கு முன்பே வெளியிடப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துஉள்ளனர். மதிப்பெண்களை மாற்ற தலா 90 லட்சம் ரூபாய் வரை பெற்று மோசடியும் செய்துள்ளனர்.
கைதான இருவருக்கும், அரசு அதிகாரிகளுடனோ, தேசிய தேர்வு முகமை அதிகாரிகளுடனோ எந்த தொடர்பும் இதுவரை கண்டறியப்படவில்லை. இருவரும் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
No comments:
Post a Comment