Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 10, 2025

மாவட்டந்தோறும் மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்திட - கனவு கட்டுப்பாட்டு அறை


மாவட்டந்தோறும் மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்திட ‘கனவு கட்டுப்பாட்டு அறை’ கல்வித்துறைகளுடன் ஒருங்கிணைந்து அரசு நடவடிக்கைபள்ளி மாணவர்களின் உயர்கல்வியை உறுதி செய்திடும் வகையில், மாவட்டந்தோறும் கனவு கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.


பொதுத்தேர்வு


தமிழகத்தில் பிளஸ்-2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த மாதம் (மே) 8-ந் தேதி வெளியிடப்பட்டது. தேர்வு எழுதியவர்களில், 95.03 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அடுத்ததாக தங்களுக்கு விருப்பமான உயர்கல்வியை தேர்ந்தெடுக்க தயாராகி வருகிறார்கள். ஒவ்வொரு ஆண்டும், பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியை தேர்ந்தெடுப்பது கிடையாது. பள்ளி படிப்போடு நிறுத்திவிட்டு, வேலைக்கு செல்கிறார்கள்.


கட்டுப்பாட்டு அறை


இந்த சூழலில், பள்ளி படிப்போடு இடைநின்ற மாணவ, மாணவிகளை உயர்கல்விக்கு கொண்டு செல்லும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. அந்தவகையில், ‘கல்லூரி கனவு திட்டம்', ‘உயர்வுக்கு படி' ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நடப்பு கல்வியாண்டிலும், பள்ளி மாணவர்களுக்கு கல்லூரி கனவு திட்டத்தின் கீழ் உயர்கல்வி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.இந்த நிலையில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் உயர்கல்விக்கு செல்வதை உறுதி செய்திடும் வகையில், மாவட்டந்தோறும் ‘கனவு கட்டுப்பாட்டு அறை' எனும் புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி உள்ளது. அந்தவகையில், மாவட்ட கலெக்டர் தலைமையில் மாவட்டந்தோறும் கனவு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருக்கிறது.


கணக்கெடுப்பு


இந்த கட்டுப்பாட்டு அறை, கல்லூரி கல்வி, தொழில்நுட்ப கல்வி, சட்டப்படிப்பு, மருத்துவக்கல்வி, வேளாண் கல்வி ஆகிய துறைகளை சேர்ந்த அலுவலர்களின் ஒருங்கிணைப்புடன் செயல்பட்டு வருகிறது. பிளஸ்-2 தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் எந்த கல்லூரிகளை தேர்வு செய்யலாம் என்றும், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, கடந்த ஆண்டு ‘கட்-ஆப்' மதிப்பெண்களுடன் ஒப்பிட்டு, நடப்பாண்டில் அவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்புகள் குறித்து அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், மாணவர்கள் உயர்கல்விக்கு விண்ணப்பித்திருக்கிறார்களா? விண்ணப்பிக்காத மாணவர்களை கணக்கெடுத்து அவற்றை விண்ணப்பிக்க நடவடிக்கை எடுப்பது போன்ற பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக அரசின் இந்த முன்னெடுப்புகள், கட்டுப்பாட்டு அறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.


உயர்வுக்கு படி


முதல்கட்ட கலந்தாய்வுகள் நிறைவடைந்த பிறகு, கடந்த ஆண்டை போலவே, அனைத்து படிப்புகளிலும் உள்ள காலி இடங்களை நிரப்பிடும் வகையில், ‘உயர்வுக்கு படி' திட்டத்தை செயல்படுத்திடவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.இதுகுறித்து உயர்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘உயர்கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர்களை, உடனடியாக உயர்கல்விக்கு விண்ணப்பிக்க ஆசிரியர்கள் ஒத்துழைப்புடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கனவு கட்டுப்பாட்டு அறை, அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட உறுதுணையாக இருக்கிறது' என்றனர்.

No comments:

Post a Comment