Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 25, 2025

ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே முறைகேடாக மாறுதல்: அன்புமணி குற்றச்சாட்டு


பொதுமாறுதல் கலந்தாய்வுக்கு முன்பே நிர்வாகக் காரணம் கூறி முறைகேடாக மாறுதல் தருவதா? தகுதியுள்ளவர்களுக்கு துரோகம் செய்யக்கூடாது!

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் அறிக்கை.

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொது இட மாறுதல் கலந்தாய்வுக்கான தேதி கூட இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், தென் மாவட்டங்களில் காலியாக இருக்கும் ஆசிரியர் பணியிடங்களில் விதிகளை மீறி ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. முறைகேடாக மேற்கொள்ளப்படும் இந்த இடமாறுதல்கள் சட்டவிரோதமானவை; கண்டிக்கத்தக்கவை ஆகும்.

பொதுமாறுதல் கோரும் ஆசிரியர்கள் அதற்காக கடந்த 19-ஆம் தேதி முதல் இன்று 25-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான காலக்கெடுவே இன்னும் முடிவடையவில்லை. காலக்கெடு முடிவடைந்த பிறகு தான் காலியாக உள்ள இடங்கள் பட்டியலிடப்பட்டு, இட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்களின் முன்னுரிமைப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அவற்றின் அடிப்படையில் கலந்தாய்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இது தான் வழக்கமாக பின்பற்றப்படும் நடைமுறை.

ஆனால், அதற்கு முன்பாகவே தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் தான் நிர்வாக மாறுதல் அடிப்படையில் கொல்லைப்புறமாக காலியிடங்கள் வேகமாக நிரப்பப்பட்டு வருகின்றன. இதேநிலை நீடித்தால் பொதுமாறுதல் கலந்தாய்வின் போது இந்த மாவட்டங்களில் நிரப்புவதற்கு காலியிடங்களே இருக்காது. இது இட மாறுதலுக்கான தகுதியும், தேவையும் கொண்டவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

கோடை விடுமுறை முடிவதற்கு முன்பாகவே பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்; குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு முன்பே ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள பணியிடங்களின் விவரம் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் முதன்மைக் கல்வி அலுவலர்கள் அலுவலகங்களில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால், தங்களுக்கு வேண்டியவர்களுக்கு சலுகை காட்டவும், பணம் ஈட்டவும் நிர்வாக மாறுதல் என்ற வாய்ப்பு ஒரு கருவியாக பயன்படுத்தப்படுகிறது.

நிர்வாக மாறுதல் என்ற பெயரில் நிகழ்த்தப்படும் அத்துமீறலால் சமூகநீதிக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. ஆசிரியர்களைப் பொறுத்தவரை தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் தான் அதிகம். பொதுமாறுதல் கலந்தாய்வு தொடங்கப்படுவதற்கு முன்பே நிர்வாக மாறுதல் என்ற பெயரில் இப்போதுள்ள காலியிடங்கள் அனைத்தும் நிரப்பப் படுகின்றன. பொதுமாறுதல் கலந்தாய்வு மூலம் தென் மாவட்டங்களுக்கு இடமாறுதல் பெற முயன்று, காலியிடங்கள் இல்லாததால், அந்த வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் மாற்று வழிகளில் முயல்வார்கள். அப்போது அவர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி இடமாறுதல் வழங்கப்படும் அளவுக்கு தாராளம் காட்டப்படும்.

இப்படியாக மொத்த ஆசிரியர்களின் பெரும்பான்மையினர் தென் மாவட்டங்களுக்கு சென்று விடும் நிலையில் வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் கற்பிப்பதற்கு போதிய ஆசிரியர்கள் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு ஆண்டும் இது வாடிக்கையாக உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளின் தேர்ச்சி விகிதங்களில் வட மாவட்டங்கள் மிகவும் பின் தங்கி இருப்பதற்கு இது தான் காரணம் ஆகும்.

அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் சீராக இருக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். அதற்கு அனைத்துப் பள்ளிகளிலும் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு வசதியாக நிர்வாக மாறுதல் என்ற பெயரில் பணியிட மாறுதல் வழங்கும் மோசடி முறைக்கு முடிவு கட்டப்பட வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வை ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் வெளிப்படையான முறையில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment